தரமற்ற முதியோர் இல்லங்களுக்கு கடும் நடவடிக்கை: புதிய விதிமுறைகள் விரைவில் அமலாகும்

மாகாண சபைகளுடன் கலந்துரையாடி உடன்பாடு எட்டப்பட்ட பின்னர், இந்த விதிமுறைகள் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தரமற்ற முதியோர் இல்லங்களுக்கு கடும் நடவடிக்கை: புதிய விதிமுறைகள் விரைவில் அமலாகும்
ADVERTISEMENT
ADVERTISEMENT

உரிய தரநிலைகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கும் முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்தார்.

முதியோர் பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குபடுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கான அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மாகாண சபைகளுடன் கலந்துரையாடி உடன்பாடு எட்டப்பட்ட பின்னர், இந்த விதிமுறைகள் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

புதிய விதிமுறைகளின் கீழ், நாட்டில் இயங்கும் அனைத்து முதியோர் பராமரிப்பு நிலையங்களும் கட்டாயமாக பதிவு செய்யப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்க செயல்பட வேண்டும். பதிவு செய்யப்படாத அல்லது சட்டவிரோதமான இடங்களில் முதியோர்களை தங்க வைப்பதை தவிர்க்குமாறு பாதுகாவலர்களிடமும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சில முதியோர் இல்லங்கள் உயர்தர சேவைகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், சில இடங்களில் போதிய வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தேவையான பணியாளர்கள் இல்லாத நிலையும் காணப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனால் தரமற்ற மற்றும் பாதுகாப்பற்ற பராமரிப்பு நிலையங்களை எதிர்காலத்தில் தொடர்ந்து நடத்த அனுமதிக்கப்படாது என்றும், அவற்றுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, நாடளாவிய ரீதியில் தற்போது சுமார் 455 பதிவு செய்யப்பட்ட முதியோர் இல்லங்கள் இயங்கி வருவதாகவும், அரசாங்கத்தால் நேரடியாக நிர்வகிக்கப்படும் முதியோர் பராமரிப்பு நிலையங்களின் எண்ணிக்கை மூன்றாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT