பீயர் தயாரிப்பில் அரிசி பயன்பாட்டுக்குத் தடை கோரி வழக்கு: மேன்முறையீட்டு நீதிமன்றம் முக்கிய உத்தரவு

பீயர் உற்பத்தியில் அரிசி மற்றும் சீனியை முதன்மை மூலப்பொருட்களாகப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குவதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர்.
பீயர் தயாரிப்பில் அரிசி பயன்பாட்டுக்குத் தடை கோரி வழக்கு: மேன்முறையீட்டு நீதிமன்றம் முக்கிய உத்தரவு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பீயர் உற்பத்தியில் அரிசி மற்றும் சீனியை முதன்மை மூலப்பொருட்களாகப் பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு தொடர்பாக, மதுவரி ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம், ஒக்டோபர் 2ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.

இந்த மனு நீதியரசர்களான ஆர்.குருசிங்க மற்றும் ஏ.பிரேம் சங்கர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதன்போது, பல மதுபான உற்பத்தி நிறுவனங்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான கே. கனகஈஸ்வரன், சுமதி தர்மவர்தன மற்றும் அலி சப்ரி ஆகியோர், ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க மேலதிக கால அவகாசம் கோரினர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மேற் குறிப்பிட்ட திகதி வரை அவகாசம் அளித்தது.

உரிமம் பெற்ற மதுபான விற்பனையாளர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், மதுவரி ஆணையாளர் நாயகம், இலங்கை தர நிர்ணய நிறுவனம் (SLSI), சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

மதுவரி கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின்படி, பீயர் என்பது முளைகட்டிய தானியத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு நொதித்தல் பானமாகும். ஆனால், தற்போது பல உற்பத்தியாளர்கள் அரிசி மற்றும் சீனியை முக்கிய மூலப்பொருட்களாகப் பயன்படுத்துவது சட்டத்துக்கு முரணானது என மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.

அரசாங்கம் அரிசிச் செய்கைக்காக அதிக மானியங்களை வழங்குகிறது. இத்தகைய அரிசியை பீயர் உற்பத்தி போன்ற வணிகத் தேவைகளுக்குப் பயன்படுத்துவது, நாட்டின் அரிசி தன்னிறைவு இலக்கைப் பாதிப்பதோடு, பொருளாதாரத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மதுபான உற்பத்தியின் தரத்தைக் கண்காணிக்கத் தேவையான தர நிர்ணயக் கட்டமைப்பை இலங்கை தர நிர்ணய நிறுவனம் முறையாகப் புதுப்பிக்கவில்லை என்றும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பீயர் உற்பத்தியில் அரிசி மற்றும் சீனியை முதன்மை மூலப்பொருட்களாகப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குவதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர