ஆர்சிபியை வீழ்த்தி வெற்றி பயணத்தை தொடங்கியது சிஎஸ்கே!

முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தின. 

ஆர்சிபியை வீழ்த்தி வெற்றி பயணத்தை தொடங்கியது சிஎஸ்கே!
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்று விறுவிறுப்பாக தொடங்கியது. இத்தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தின. 

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் அடுத்தடுத்து பவுண்டரிகளாக விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அவர் 8 பவுண்டரிகளுடன் 35 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ராஜத் பட்டிதாரும் ரன்கள் ஏதுமின்றி முஸ்தஃபிசூர் ரஹ்மானின் அதே ஓவரில் விக்கெட்டை இழந்தார். 

இதனையடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். விராட் கோலியுடன் இணைந்து அதிரடி வீரர் கேமரூன் க்ரீன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

 21 ரன்களில் விராட் கோலியும், 18 ரன்களில் கேமரூன் க்ரீனும் அடுத்தடுத்து முஸ்தஃபிசூர் ரஹ்மான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த அனுஜ் ராவத் - தினேஷ் கார்த்திக் இணை தொடக்கத்தில் நிதானம் காட்டினர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அனுஜ் ராவத் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 48 ரன்களையும், தினேஷ் கார்த்திக் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 38 ரன்களையும் சேர்த்தனர். இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 95 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அசத்தினர். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களைச் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் முஸ்தஃபிசூர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - ரச்சின் ரவீந்திரா இணை தங்களது முதல் பந்திலேயே பவுண்டரி விளாசி இன்னிங்ஸைத் தொடங்கினர். 

சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த ரச்சின் ரவீந்திரா - அஜிங்கியா ரஹானே இணை அதிரடியாக விளையாடினர். தனது முதல் ஐபிஎல் போட்டியில் ரச்சின் ரவீந்திரா அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். 

ரச்சின் ரவீந்திரா 15 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய டேரில் மிட்செல்லும் அடுத்தடுத்து சிக்சர்களை விளாசினார்.

மறுமுனையில் அதிரடியாக அஜிங்கியா ரஹானே தனது பங்கிற்கு 2 சிக்சர்களுடன் 27 ரன்களிலும், டேரில் மிட்செல் இரண்டு சிக்சர்கள்டன் 22 ரன்களுடனும் என அடுத்தடுத்து கேமரூன் க்ரீன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.

ஷிவம் தூபே - ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிவம் தூபே 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 34 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா ஒரு சிக்சருடன் 25 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.

இதன் மூலம் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது வெற்றியுடன் தொடங்கி இருக்கின்றது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT