வட்ஸ்அப்பில் புதிய வசதி: முன்பக்க மற்றும் பின்பக்க கெமராக்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்
உலகளவில் பிரபலமான தகவல் பரிமாற்றச் செயலியான வட்ஸ்அப் (WhatsApp), கையடக்கத் தொலைபேசியின் முன்பக்க மற்றும் பின்பக்க கெமராக்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தி புகைப்படங்களையும் காணொளிகளையும் பதிவு செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதிய வசதிகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் வட்ஸ்அப், தற்போது இரட்டை கெமரா (Dual Camera) வசதியைச் சோதனை அடிப்படையில் வழங்கி வருகின்றது.
பொதுவாக கையடக்கத் தொலைபேசிகளில் புகைப்படம் அல்லது காணொளியைப் பதிவு செய்யும்போது முன்பக்க அல்லது பின்பக்க கெமரா ஆகியவற்றில் ஒன்றையே பயன்படுத்த முடியும். எனினும், வட்ஸ்அப்பின் இந்தப் புதிய வசதியின் மூலம் இரண்டு கெமராக்களையும் ஒரே நேரத்தில் இயக்க முடியும்.
இதன்மூலம் பயனர்கள் தம்மைச் சுற்றியுள்ள காட்சிகளைப் பின்பக்க கெமரா ஊடாகப் பதிவு செய்யும் அதேவேளை, தமது முகத்தையும் முன்பக்க கெமரா ஊடாகப் பதிவு செய்துகொள்ள முடியும்.
குறிப்பாக சுற்றுலாப் பயணங்கள், குடும்ப நிகழ்வுகள் மற்றும் முக்கிய தருணங்களைப் பதிவு செய்யும்போது இந்த வசதி பயனுள்ளதாக அமையும்.
முன்பக்க கெமராவில் பதிவாகும் காட்சி, கையடக்கத் தொலைபேசியின் திரையில் சிறிய சாளரமாகத் தோன்றும். குறித்த சாளரத்தைப் பயனர்கள் தமது விருப்பத்திற்கு ஏற்ப திரையின் வெவ்வேறு பகுதிகளுக்கு நகர்த்திக்கொள்ள முடியும்.
அத்துடன், முன்பக்க மற்றும் பின்பக்க கெமராக்களில் பதிவாகும் காட்சிகளின் இடங்களையும் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு கெமராக்களிலும் பதிவாகும் காட்சிகளை ஒரே புகைப்படமாகவோ அல்லது காணொளியாகவோ சேமித்துக்கொள்ள முடியும்.
அவ்வாறு பதிவு செய்யப்பட்ட புகைப்படங்களையும் காணொளிகளையும் வட்ஸ்அப் தனிப்பட்ட உரையாடல்கள், குழுக்கள், சேனல்கள் மற்றும் ஸ்டேட்டஸ் (Status) ஆகியவற்றின் ஊடாகப் பகிர்ந்துகொள்ள முடியும்.
தற்போது இந்தப் புதிய வசதி ஆண்ட்ரொய்ட் பீட்டா (Android Beta) பதிப்பைப் பயன்படுத்தும் பயனர்களுக்குப் படிப்படியாக வழங்கப்பட்டு வருகின்றது.
சோதனை நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் ஏனைய பயனர்களுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி எப்போது கிடைக்கும் என்பது தொடர்பான உறுதியான திகதி இதுவரை குறிப்பிடப்படவில்லை.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.