ஈரானுடன் சண்டைநிறுத்தம் நீட்டிப்பு: கூடுதல் நேரம் வழங்கியுள்ள அமெரிக்கா
அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுடன் ஏற்பட்டுள்ள பதற்றநிலைக்கான சண்டைநிறுத்தம் முடிவடைய சில மணிநேரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அதனை மேலும் நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வரும் பாகிஸ்தான் அரசின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, ஈரானுக்கு மேலதிக நேரம் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைதி ஒப்பந்தம் தொடர்பான தனது பரிந்துரையை ஈரான் சமர்ப்பிக்கும் வரை சண்டைநிறுத்தம் தொடரும் என்று டிரம்ப் குறிப்பிட்டார். அதேவேளையில், ஈரானின் துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்த சண்டைநிறுத்தம் இன்று நிறைவடைய இருந்த நிலையில், அதனை நீட்டிக்கும் முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது.
மேலும், இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க துணை அதிபர் JD Vance பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ளவிருந்தார். எனினும், அந்த பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் தனது Truth Social சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.
