தென்னாபிரிக்காவில் அடுத்தடுத்து இடம்பெற்ற இரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 17 பேர் உயிரிழப்பு

தென்னாபிரிக்காவின் குவாசுலு-நடால் மற்றும் பிரிட்டோரியா ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்னாபிரிக்காவில் அடுத்தடுத்து இடம்பெற்ற இரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 17 பேர் உயிரிழப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

தென்னாபிரிக்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அடுத்தடுத்து இடம்பெற்ற இரு வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளமை தொடர்பில் அந்நாட்டுப் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

குவாசுலு-நடால் (KwaZulu-Natal) மாகாணத்தில் மினி பஸ் ஒன்றுக்குள் 8 ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், சில மணித்தியாலங்களின் பின்னர் மேற்கு பிரிட்டோரியாவிலுள்ள (Pretoria) குடிசையொன்றில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

குறித்த இரு சம்பவங்களுக்கும் இடையில் எவ்விதத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ள பொலிஸார், துப்பாக்கிச் சூடுகளுக்கான நோக்கம் இதுவரை கண்டறியப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர். 

கும்பல் மோதல்கள் உள்ளிட்ட வன்முறைக் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் தென்னாபிரிக்கா பாரிய சவால்களை எதிர்கொண்டு வருவதுடன், உலகிலேயே அதிக கொலை விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகவும் விளங்குகின்றது.

சட்டவிரோதத் துப்பாக்கிகளின் புழக்கம் அதிகரித்துள்ள தென்னாபிரிக்காவில், துப்பாக்கி வன்முறைகள் தொடர்ச்சியான பிரச்சினையாக உருவெடுத்துள்ளன. முன்னதாக கடந்த செப்டெம்பர் மாதமும் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் 28 பேர் கொல்லப்பட்டிருந்தனர். செப்டெம்பர் 25ஆம் திகதி ஜோகன்னஸ்பேர்க் (Johannesburg) அருகே மதுபானசாலையொன்றிற்குள் நுழைந்த 8 ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் உயிரிழந்ததுடன் 14 பேர் காயமடைந்தனர். அதற்கடுத்த நாள் கேப் டவுன் (Cape Town) நகருக்கு அருகிலுள்ள பொழுதுபோக்கு நிலையத்திற்கு வெளியே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டதுடன் 11 பேர் காயமடைந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத சுரங்கத் தொழில்களில் ஈடுபடும் குற்றக் கும்பல்களுக்கு இடையிலான ஆதிக்கப் போட்டிகளே இவ்வாறான வன்முறைகளுக்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளன.

 கடந்த பெப்ரவரி மாதம் உரையாற்றிய தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா (Cyril Ramaphosa), திட்டமிட்ட குற்றச்செயல்கள் நாட்டின் ஜனநாயகம், சமூகம் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு உடனடி அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆயுத வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இவ்வாண்டின் முற்பகுதியில் கவுடெங் உள்ளிட்ட அதிக கொலை விகிதங்களைக் கொண்ட 5 மாகாணங்களில் பொலிஸாருடன் இணைந்து இராணுவமும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.

அண்மைய பொலிஸ் புள்ளிவிபரங்களுக்கு அமைய, 2026 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் 5,427 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், இது நாளொன்றுக்குச் சராசரியாக 60 கொலைகள் என்ற விகிதத்தில் அமைந்துள்ளது. எவ்வாறாயினும், இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 6 சதவீத வீழ்ச்சியாகும் எனப் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT