நைஜீரியாவில் இராணுவ விமானம் வீழ்ந்து விபத்து: படையினர் உட்பட 32 பேர் உயிரிழப்பு; மூன்று நாள் தேசிய துக்கம் பிரகடனம்

நைஜீரியாவில் இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் படையினர் உட்பட 32 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஜனாதிபதி போலா டினுபு மூன்று நாள் தேசிய துக்கம் பிரகடனப்படுத்தியுள்ளார்.

நைஜீரியாவில் இராணுவ விமானம் வீழ்ந்து விபத்து: படையினர் உட்பட 32 பேர் உயிரிழப்பு; மூன்று நாள் தேசிய துக்கம் பிரகடனம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

நைஜீரியாவில் இராணுவ விமானமொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 25 பயணிகள் மற்றும் 7 விமானப் பணியாளர்கள் உட்பட 32 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி போலா டினுபு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஆபிரிக்காவின் அதிக சனத்தொகை கொண்ட நாடான நைஜீரியாவில் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற மிக மோசமான விமான அனர்த்தங்களில் ஒன்றாக இது பதிவாகியுள்ளது.

தெற்கு நைஜீரியாவின் பெனின் நகரத்திலிருந்து வர்த்தக தலைநகரான லாகோஸ் நோக்கி வழக்கமான கண்காணிப்பு மற்றும் பணிகளுக்காகப் புறப்பட்ட குறித்த விமானம், தென்மேற்கு ஒன்டோ மாகாணத்தின் இக்போகோடா பகுதியில் காலை ஒன்பது மணியளவில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, இது ஆயுதப் படைகளுக்கும் முழு நாட்டிற்கும் மிகுந்த வேதனையளிக்கும் தருணம் என குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த விமானப்படை அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடு முழுவதும் மூன்று நாட்களுக்கு தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் பயோ ஓனனுகா தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்நாட்களில் தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் அறிவிக்கப்பட்ட பின்னர் அவர்களின் விபரங்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

விபத்துக்குள்ளான விமானம் ஏடிஆர்-42 ரகத்தைச் சேர்ந்த இரண்டு என்ஜின்கள் கொண்ட பயணிகள் விமானம் என விமான போக்குவரத்து அமைச்சர் பெஸ்டஸ் கியாமோ மற்றும் ஜனாதிபதி செயலகம் உறுதிப்படுத்தியுள்ளன.

விபத்து நடந்த இடம் கடற்படைத் தளத்திற்கு அருகில் அமைந்துள்ளதாகவும், படகுகள் மூலம் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில், விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு நைஜீரிய விமானப்படைக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, எண்ணெய் வளம் மிக்க பகுதியான இக்போகோடாவில் விமானம் வீழ்ந்த போது இடி முழக்கம் போன்ற பாரிய சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சதுப்பு நிலத்தில் மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் விபத்து தொடர்பில் கடற்படைத் தளத்திற்கும் உள்ளூர் மக்களுக்கும் தகவல் வழங்கியுள்ளார். அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மற்றும் பொலிஸாருடன் இணைந்து மேலதிக நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT