அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து: 15 குழந்தைகள் உட்பட 139 பேர் உயிரிழப்பு
ஜிபூட்டி நாட்டிற்கு அருகே அகதிகள் பயணித்த படகு கடலில் மூழ்கியதில் 15 குழந்தைகள் உட்பட குறைந்தது 139 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், மேலும் பலர் மாயமாகியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு தெரிவித்துள்ளது.
சுமார் 305 பயணிகளுடன் ஜிபூட்டியிலிருந்து ஏமன் நோக்கிச் சென்ற அந்தப் படகு, வியாழக்கிழமை இரவு ஓபோக் துறைமுகப் பகுதிக்கு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் சுமார் 82 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணிகளின் போது மேலும் 30 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னதாக 109 ஆக இருந்த உயிரிழப்பு எண்ணிக்கையை ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு 139 ஆறிவித்துள்ளது.
உயிருடன் மீட்கப்பட்டவர்கள் அனைவரும் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், அவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை உள்ளூர் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியதொரு வாழ்க்கையைத் தேடிச் செல்லும் புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் கடுமையான ஆபத்துகளை இந்தத் துயரச் சம்பவம் மீண்டும் நினைவூட்டுவதாக ஜிபூட்டிக்கான சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் தூதுக்குழுத் தலைவர் அலெக்சாண்டர் கோய்சாக் தெரிவித்துள்ளார்.
இது தாங்க முடியாத உயிரிழப்பு என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தங்கள் பிரார்த்தனைகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆபிரிக்காவின் கொம்புப் பகுதியிலிருந்து பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பை நாடி ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வளைகுடா நாடுகளை நோக்கி இத்தகைய ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர்.
ஏமன் நாட்டில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நீடிக்கும் உள்நாட்டுப் போர் மற்றும் பிராந்தியத்தில் நிலவும் உறுதியற்ற தன்மைக்கு மத்தியிலும், வறுமை, பாதுகாப்பின்மை மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் காரணமாக அகதிகள் பாப் எல்-மண்டேப் நீரிணை வழியாக ஏமனுக்குத் தொடர்ந்து ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.