டிசம்பர் மாதத்திற்குள் பணவீக்கம் 9 சதவீதமாக உயரக்கூடும்: மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை
எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் இலங்கையின் பணவீக்க விகிதம் சுமார் 9 சதவீதமாகவோ அல்லது அதனை விடச் சற்று அதிகமாகவோ உயரக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று (20) எச்சரித்துள்ளார்.
மத்திய வங்கியின் நாணயக் கொள்கை மீளாய்வு தொடர்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார். 2026 ஒக்டோபர் மாதத்தில் பணவீக்கம் ஏற்கனவே 8.3 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும், இது முன்னர் கணிக்கப்பட்ட அளவை விட அதிகம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல் நிலை மற்றும் உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு ஆகியவையே எதிர்பார்த்ததை விட பணவீக்கம் அதிகரிப்பதற்குக் காரணம் என அவர் விளக்கமளித்துள்ளார்.
2026 மே மாதத்தில் மத்திய வங்கி வட்டி விகிதங்களை அதிகரித்தபோது, பணவீக்கம் சுமார் 7 முதல் 8 சதவீதம் வரை உயர்ந்து பின்னர் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. எவ்வாறாயினும், மத்திய கிழக்கு மோதல் எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் தொடர்ந்தமையாலும், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் தொடர்ந்தும் உயர்வாக இருந்தமையாலும் பணவீக்கம் முன்னைய எதிர்வுகூறல்களைத் தாண்டிச் சென்றுள்ளது.
மத்திய கிழக்கு மோதல் குறுகிய காலத்தில் முடிவுக்கு வரும் எனவும், அதன் பின்னர் எண்ணெய் விலைகள் நிலைபெறும் எனவும் தாம் எதிர்பார்த்ததாகக் குறிப்பிட்ட ஆளுநர், அண்மைக்காலம் வரை எண்ணெய் விலைகள் உயர்வாகவே காணப்பட்டதால் பணவீக்கம் தமது எதிர்பார்ப்புகளை விட அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
அண்மைய கணிப்பீடுகளின்படி, எதிர்வரும் மாதத்திற்குள் பணவீக்கம் சுமார் 9 சதவீதத்தை அல்லது அதனை விடச் சற்று அதிகமான மட்டத்தை எட்டக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் மாதங்களில் பணவீக்கம் இவ்வாறு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், 2027 ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் பணவீக்கம் படிப்படியாகக் குறைந்து மத்திய வங்கியின் இலக்கான 5 சதவீதத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கத்தை இயலுமானவரை விரைவாக இலக்கு வைக்கப்பட்ட மட்டத்திற்குக் கொண்டு வருவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய கலாநிதி நந்தலால் வீரசிங்க, பணவீக்கம் தொடர்ந்தும் உயர்வாக இருப்பது நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் கொள்வனவு சக்தி ஆகியவற்றில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.