சிறைச்சாலைகளில் இட நெருக்கடி: கைதிகள் அரச கட்டிடங்களில் தங்குவார்கள் – அமைச்சர்

699 கைதிகளை மட்டுமே தடுத்து வைக்கக் கூடிய பல்லேகல மற்றும் தும்பர சிறைச்சாலைகளில் தற்போது 2,246 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிறைச்சாலைகளில் இட நெருக்கடி:  கைதிகள் அரச கட்டிடங்களில் தங்குவார்கள் – அமைச்சர்
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள கடுமையான இட நெருக்கடியை சமாளிக்கும் வகையில், சிறு குற்றங்களுடன் தொடர்புடைய கைதிகளை பயன்பாட்டில் இல்லாத அரச கட்டிடங்களில் தற்காலிகமாகத் தடுத்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது, ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. சமிந்திராணி கிரியெல்ல எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதன் காரணமாக, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளும் நிரம்பி வழிகின்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 699 கைதிகளை மட்டுமே தடுத்து வைக்கக் கூடிய பல்லேகல மற்றும் தும்பர சிறைச்சாலைகளில் தற்போது 2,246 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையைத் தணிக்க சிறைச்சாலைகளின் புதிய நிர்மாணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதுடன், தும்பர சிறைச்சாலையின் புனரமைப்பிற்காக 4,363 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், அரச இரசாயன பகுப்பாய்வாளர் சேவையில் காணப்படும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக போதைப்பொருள் தொடர்பான அறிக்கைகள் தாமதமாக சமர்ப்பிக்கப்படுவதால், பிணை வழங்குவதிலும் தாமதம் ஏற்படுவதாக அவர் கூறினார். இதனைத் தீர்க்க 52 பேரை புதியதாக இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், கூடுதலாக 32 பேரைச் சேவையில் இணைத்துக் கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தச் சூழ்நிலையில், சிறைச்சாலைகளின் இட நெருக்கடியை உடனடியாகக் குறைக்கும் நடவடிக்கையாக, சிறு குற்றங்களுடன் தொடர்புடைய கைதிகளை பயன்பாட்டில் இல்லாத அரச கட்டிடங்களில் தற்காலிகமாகத் தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வலியுறுத்தினார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT