நாட்டில் 167 தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஒருவருக்கு மட்டுமே SLS தரச்சான்றிதழ்: வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!
தெங்கு அபிவிருத்தி அதிகார சபையில் 167 தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் பதிவு செய்துள்ள போதிலும், அவர்களில் ஒரேயொரு உற்பத்தியாளர் மட்டுமே இலங்கைத் தரநிலைகள் நிறுவனத்தின் (SLS) தரச்சான்றிதழைப் பெற்றுக்கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இலங்கைத் தரநிலைகள் நிறுவனத்தின் பொருட்கள் சான்றளிப்புப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ஆயிஷா சல்வதுர இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தேங்காய் எண்ணெயானது 'SLS 32' தர நியமத்தின் கீழ் வருவதாகவும், தற்போதைய நிலவரப்படி தேங்காய் எண்ணெய்க்கு SLS தரக் குறியீட்டைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக, உள்நாட்டு சந்தைக்கான தேங்காய் எண்ணெய்க்குத் தரச்சான்றிதழைப் பெற்றுக்கொள்வது ஒரு தன்னார்வ நடவடிக்கையாகவே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்படும் 52 வகையான உணவுப் பொருட்களின் தரத்தை சோதிக்கும் பொறுப்பு இலங்கைத் தரநிலைகள் நிறுவனத்துக்கு உள்ளதாகவும், அவற்றில் தேங்காய் எண்ணெயும் உள்ளடங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் கொள்கலன்களிலிருந்து பெறப்படும் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, அதனடிப்படையிலேயே தமது நிறுவனம் உரிய பரிந்துரைகளை வழங்குவதாகவும் அவர் விளக்கமளித்தார்.
இதற்கிடையில், நாட்டின் பெரும்பாலான தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் SLS தரச்சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்குப் பொருத்தமான மட்டத்தை இன்னமும் எட்டவில்லை என தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே, இந்தத் தகவல்களை குறித்த அதிகாரிகள் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.