கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களை காட்டிய விரிவுரையாளர் கைது - மதிப்பெண்களை குறைப்பதாக மிரட்டல்!
அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் பயிற்சி மாணவிகளுக்கு ஆபாச வீடியொக்களைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயது விரிவுரையாளர், அம்பாறை பிரதேச சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான குறித்த விரிவுரையாளர், குறித்த கல்லூரியில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் முக்கிய பொறுப்பில் இருந்துவந்துள்ளார்.
இதன்காரணமாக, தாம் இது குறித்து வெளியில் முறைப்பாடு அளித்தால் தங்களது மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு, கல்வி வாழ்க்கை பாழாகிவிடும் என்ற அச்சத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் நீண்டகாலமாக மௌனம் காத்து வந்துள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆரச்சிக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில், அம்பாறை மாவட்ட மகளிர் பணியகத்தின் விசேட பொலிஸ் குழுவினர் நேற்று (01) சந்தேகநபரான 55 வயதுடைய விரிவுரையாளரைக் கைது செய்தனர்.
சந்தேகநபர் அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (02) ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
(செய்தி - பாறுக் ஷிஹான்)
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.