உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 15 பிரதிவாதிகள் குற்றவாளிகளாக அறிவிப்பு; 09 பேர் விடுதலை

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் சஹ்ரானின் முக்கிய சகா நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 15 பிரதிவாதிகளை குற்றவாளிகளாகவும், 9 பேரை விடுதலை செய்தும் கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்ப்பளித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 15 பிரதிவாதிகள் குற்றவாளிகளாக அறிவிப்பு; 09 பேர் விடுதலை
ADVERTISEMENT
ADVERTISEMENT

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பை, கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது. 

சதித்திட்டம் தீட்டியமை மற்றும் தாக்குதல்களுக்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 23,270க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், 15 பிரதிவாதிகள் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதேவேளை, ஏனைய 09 பிரதிவாதிகளையும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமின் முக்கிய சகா எனப் புலனாய்வாளர்களால் அடையாளம் காணப்பட்ட நௌஃபர் மௌலவியும் இவ்வாறு குற்றவாளியாகக் காணப்பட்டவர்களில் ஒருவராவார். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்கான தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக நீதிமன்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், சற்று நேரத்தில் அவை மீண்டும் ஆரம்பமாகி, தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகிய மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டு வருகின்றது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இவ்வழக்கில் 2,309 சாட்சிகள் சாட்சியமளித்திருந்த நிலையில், கடந்த ஓகஸ்ட் 24ஆம் திகதி சாட்சி விசாரணைகள் முழுமையாக நிறைவடைந்திருந்தன.

நீதிமன்றத் தீர்ப்பு அறிவிக்கப்படுவதை முன்னிட்டு, அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு, கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பல விசேட பொலிஸ் குழுக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT