கிரீஸில் நடந்த அனிருத் – காவ்யா மாறன் திருமணம்: பிரபலங்களின் விருப்பத் தேர்வாக கிரீஸ் விளங்குவது ஏன்?
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் டிவி நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குநர்களுள் ஒருவரான காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் கிரீஸ் நாட்டில் நடைபெற்றது.
நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் இரு நாள்கள் நிகழ்வாக இத்திருமணம் நடைபெற்றதுடன், தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் திருமணத்தில் பங்கேற்பதற்காக கிரீஸ் சென்றனர்.
பிரபலங்களின் 'டெஸ்டினேசன் வெட்டிங்' தேர்வாக கிரீஸ் திகழ்வது ஏன்?
'டெஸ்டினேசன் வெட்டிங்' (Destination Wedding) செய்துகொள்வதற்காக பிரபலங்கள் கிரீஸ் நாட்டைத் தேர்வு செய்வதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் உள்ளன.
ஐரோப்பிய நாடான கிரீஸ் இயற்கை எழில் கொஞ்சும் அழகிற்கும், தொன்மையான வரலாற்றுக்கும் பெயர் பெற்றது. உயரமான மலைகள், நீண்ட கடற்கரைகள் மற்றும் ஏஜியன் கடலின் நீல நிறக் கடல் ஆகியவை அந்நாட்டின் முக்கிய அம்சங்களாகும்.
கிரீஸில் ஆயிரக்கணக்கான தீவுகள் அமைந்துள்ளன. அவற்றில் மிகப்பெரிய தீவு கிரீட் (Crete) ஆகும்.
பண்டைய கிரேக்க நாகரிகத்தின் கலை, தத்துவம், இலக்கியம் மற்றும் அரசியல் தாக்கங்களை தலைநகர் ஏதென்ஸ் போன்ற நகரங்களின் வரலாற்றுச் சின்னங்களில் காணலாம்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நிகழ்ந்த வேகமான மாற்றங்களால், சுற்றுலா மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறைகள் கிரீஸின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கத் தொடங்கின.
'மம்மா மியா' திரைப்படம் படமாக்கப்பட்ட கிரீஸின் ஸ்கோபெலோஸ் (Skopelos) தீவு சர்வதேச அளவில் கவனம் பெற்று, பல தம்பதிகளுக்கு கிரீஸில் திருமணம் செய்ய வேண்டும் என்ற கனவை உருவாக்கியுள்ளது.
வெளிநாட்டுத் தம்பதிகளின் விருப்பப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இத்தீவில், 2018 கோடைக்காலத்தில் மட்டும் 1,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தம்பதிகள் திருமணம் செய்துகொண்டனர். ஆரஞ்சு நிறச் சூரிய அஸ்தமனம், வெள்ளை நிற வீடுகள், எரிமலை வெடிப்பால் உருவான பள்ளத்தாக்குகள் மற்றும் கடலைப் பார்த்த விடுதிகள் தம்பதிகளைப் பெரிதும் ஈர்க்கின்றன.
20 பேருக்கு மிகாமல் நெருங்கிய குடும்பத்தினர் மட்டும் பங்கேற்கும் திருமணங்களுக்கு மைகோனோஸ், ஃபாபோஸ் போன்ற கொண்டாட்டத் தீவுகளை விட அமோர்கோஸ், கெஃபலோனியா போன்ற அமைதியான சிறிய தீவுகள் அதிக வரவேற்பைப் பெறுகின்றன.
வெளிநாட்டுத் திருமணங்களுக்கான திட்டமிடல் வெளிநாட்டில் திருமணம் செய்வது கவர்ச்சிகரமானது என்றாலும், அந்நாட்டின் சட்ட நடைமுறைகள், ஆவணங்கள், பருவநிலை, தங்குமிடம், நிகழ்ச்சி ஏற்பாடுகள் மற்றும் செலவுகள் என பலவற்றையும் முன்கூட்டியே திட்டமிடுவது மிகவும் அவசியமாகும்.





எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.