ஒற்றுமை மற்றும் அமைதியின் உண்மைப் பாடத்தை ஹஜ் பெருநாள் உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது – சஜித் பிரேமதாச
புனித ஹஜ் பெருநாளின் போது தேசம், நிறம், சமூக அந்தஸ்து உள்ளிட்ட எந்தவொரு வேறுபாடுகளும் இன்றி, ஒரே நோக்கத்துடனும் ஒரே ஆடையுடனும் முஸ்லிம்கள் ஒன்றிணைவது மனித ஒற்றுமைக்கான ஆழமான செய்தியை உலகிற்கு வழங்குகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள தனது வாழ்த்துச் செய்தியில், அனைத்து மக்களின் இதயங்களிலும் அமைதியையும் நம்பிக்கையையும் வளர்ப்பதே ஹஜ் யாத்திரையின் பிரதான நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமிய நாட்காட்டியின் துல்ஹஜ் மாதத்தில் மக்காவிற்கு மேற்கொள்ளப்படும் புனித ஹஜ் யாத்திரை, இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் முக்கியமான ஐந்தாவது கடமையாகக் கருதப்படுவதாகவும், அதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்வது அவசியமானதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார மற்றும் உடல் தகுதி உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் வாழ்நாளில் குறைந்தது ஒருமுறையாவது ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள வேண்டும் என்பதோடு, ஆன்ம சுத்திகரிப்பு, இறைவனுக்கு அடிபணிதல், உலக மக்களிடையே சமத்துவம் மற்றும் ஒற்றுமையை நிலைநிறுத்துதல் போன்ற உயரிய நோக்கங்களும் அதனுடன் இணைந்துள்ளன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய உலகில் உருவாகியுள்ள பல பிரச்சினைகளின் அடிப்படை காரணம் மனிதர்களுக்கிடையிலான அவநம்பிக்கையாகும் என்றும், அதனால் அமைதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் உருவாகியுள்ள யுத்த சூழ்நிலைகள், மனித மனங்களில் அமைதியும் நம்பிக்கையும் வலுப்பெற வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இலங்கையும் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையையும் சவால்களையும் எதிர்கொண்டு வருவதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் நாட்டை பிளவுகளால் அல்லாது ஒற்றுமையினாலேயே முன்னேற்ற முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உண்மையை அச்சமின்றி ஏற்றுக்கொண்டு அதற்காக செயல்பட தைரியம், தியாகம், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நல்லெண்ணம் அவசியமானவை என்றும், ஹஜ் பெருநாள் எடுத்துரைக்கும் உயரிய போதனைகள் அதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பன்முகத்தன்மையில் ஒற்றுமையை வலியுறுத்தும் இஸ்லாத்தின் உண்மையான போதனைகளை அனைவரும் பின்பற்றி, நல்லிணக்கமும் மனிதநேயமும் நிறைந்த சமூகத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தனது வாழ்த்துச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

