அம்பாறை பெண் பிசியோதெரபிஸ்ட் மரணம்: காதலன் எனக்கூறப்படும் நபர் குறித்து தீவிர விசாரணை

சந்தேகநபர் போலி தலைமுடி (Wig) அணிந்து தனது உண்மையான தோற்றத்தை மறைத்து வாழ்ந்திருக்கலாம் என்றும், பல பெண்களுடன் தொடர்புகளை பேணி, அவர்களை ஏமாற்றி பணம் பறித்த சம்பவங்களிலும் தொடர்புடையவராக இருக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அம்பாறை பெண் பிசியோதெரபிஸ்ட் மரணம்: காதலன் எனக்கூறப்படும் நபர் குறித்து தீவிர விசாரணை
ADVERTISEMENT
ADVERTISEMENT

அம்பாறை பொது வைத்தியசாலையில் பணியாற்றிய பெண் பௌதீக சிகிச்சை நிபுணர் (பிசியோதெரபிஸ்ட்) மரணம் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் கழுத்து இறுக்கப்பட்டதன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை விசாரணை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கொலைச் சந்தேகநபராக கருதப்படும், உயிரிழந்த யுவதியின் காதலன் எனக்கூறப்படும் நபரைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் உதவியையும் பொலிஸார் நாடியுள்ள நிலையில், இதுவரை குறித்த நபர் கைது செய்யப்படவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT

விசாரணைகளின் போது, சந்தேகநபர் தொடர்பான பல முக்கிய தகவல்கள் அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த யுவதியிடம் அவர் தன்னை “தினேத் திஸாநாயக்க” என்ற பெயரில் அறிமுகப்படுத்தியிருந்த போதிலும், அவரது தேசிய அடையாள அட்டையில் “ஜயசுந்தர முதியான்சேலாகே சம்பிக ஸ்ரியான் ஜயசுந்தர” என்ற பெயர் இடம்பெற்றுள்ளதாகவும், அவர் நாரம்மல பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேகநபர் போலி தலைமுடி (Wig) அணிந்து தனது உண்மையான தோற்றத்தை மறைத்து வாழ்ந்திருக்கலாம் என்றும், பல பெண்களுடன் தொடர்புகளை பேணி, அவர்களை ஏமாற்றி பணம் பறித்த சம்பவங்களிலும் தொடர்புடையவராக இருக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவருக்கு எதிராக கம்பஹா, புதுக்கடை மற்றும் திஸ்ஸமஹாராமய நீதவான் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், பெண்களை ஏமாற்றி பணம் பறித்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கும் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான இந்த நபரின் நடவடிக்கைகளுக்கு அவரது மனைவியும் ஆதரவளித்திருக்கலாம் என்ற சந்தேகத்தையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை, தன்னை மென்பொருள் பொறியியலாளராக அறிமுகப்படுத்தியிருந்தாலும், அது உண்மையா என்பது தொடர்பிலும் சந்தேகம் நிலவுவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெண்களை ஏமாற்றுவதற்காகவே அவ்வாறு கூறியிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதுடன், கைது செய்யப்பட வேண்டியுள்ள சந்தேகநபருக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடை உத்தரவும் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 17ஆம் திகதி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனமொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது. பின்னர், அவர் அம்பாறை பொது வைத்தியசாலையில் பணியாற்றிய பௌதீக சிகிச்சை நிபுணர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும், குறித்த யுவதியின் காதலன் எனக்கூறப்படும் நபர், யுவதியின் உடலை நுவரெலியாவில் உள்ள விடுதி ஒன்றிலிருந்து வெளியே கொண்டு சென்ற காட்சிகள் சிசிடிவி கெமராவில் பதிவாகியிருந்தன.

இதேவேளை, வெலிகம பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த யுவதியின் இறுதிச் சடங்குகள் நேற்று (19) இடம்பெற்றுள்ளன. சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது மூன்று பொலிஸ் குழுக்களால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT