மலையில் மலைப்போல் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்

எகோ ஸ்பின்ட்லஸ் நிறுவனத்தின் தகவல்களுக்கு அமைய, கடந்த 2022ஆம் ஆண்டு 130,000 பிளாஸ்டிக் போத்தல்கள் சிவனொளிபாதமலை பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்டதாகவும் இம்முறை இதுவரை 56,000 பிளாஸ்டிக் போத்தல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மலையில் மலைப்போல் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்
ADVERTISEMENT
ADVERTISEMENT

மஹேஸ்வரி விஜயனந்தன்

எவ்வித மத பிரிவினைகளும் இன்றி இலங்கையில் உள்ள பிரதான மதங்களைச் சேர்ந்தவர்கள் சென்று வழிபடும் இடமாகவும் இலங்கையின் இரண்டாவது உயரமான மலையுமான சிவனொளிபாதமலை வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும் பலரும் விரும்பிச் செல்லும் இலங்கையின் இயற்கை அழகுக்கு மெருகூட்டும் மற்றுமொரு பிரதேசமாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கடல் மட்டத்திலிருந்து 7,359 அடி உயரத்திலும் இலங்கையின் உயரமான மலைகளுள் இரண்டாம் இடத்திலும் உள்ள சிவனொளிபாதமலையானது, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லைப் பகுதியில் அமைந்துள்ள புனித தலமாகக் கருதப்படுவதுடன், இதன் உயரத்திலிருந்து இலங்கையின் முழு அழகையும் சூரியோதயத்தையும் கண்டு மகிழவென வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவு படையெடுக்கும் இடமாகவும் காணப்படுகின்றது.

சிவனொளிபாதமலைக்கான யாத்திரை பருவகாலம் ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் மாதம் வரும் பூரணை தினத்துடன் ஆரம்பமாகி மார்ச் ஏப்ரல் மாதம் வரும் பூரணையுடன் நிறைவுக்கு வரும் இலங்கையில் மிக நீண்ட கால பருவ யாத்திரையைக் கொண்ட இடமாக இது போற்றப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தப் பருவ கால யாத்திரையின் போது சிவனடியைத் தரிசிக்க செல்பவர்களை விட அவர்களால் அங்கு கொண்டு செல்லப்படும் கழிவுகள் சுற்றாடலுக்கு பாரிய அச்சுறுத்தலாய் அமைந்துள்ளது.

பருவகாலம் ஆரம்பித்து நிறைவடையும் ஒவ்வொரு முறையும் அங்கு தொன் கணக்கில் உக்கா கழிவுகள் சேகரிக்கப்பட்டு அவை மீள்சுழற்சிக்காக பல்வேறு இடங்களுக்க அனுப்பி வைக்கப்படுவதுடன் இதற்கு மஸ்கெலியா பிரதேசசபை, நல்லதண்ணி பொலிஸார், பிரதேச சமூக அமைப்புகளுடன் எகோ ஸ்பின்ட்லஸ்  என்ற தனியார் நிறுவனமும் கைகோர்க்கின்றது.

ஒவ்வொரு வருடமும் சிவனொளிபாதமலை யாத்திரைக்  காலமான டிசெம்பர் மாதம் வரும் பௌர்ணமியுடன் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதிக்குள் அங்கு வந்து செல்லும் யாத்திரிகர்களை விட யாத்திரிகர்களால் சுற்றாடலுக்கு வீசப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப்பொருள்களின் தொன் அதிகமாகிக் கொண்டே வருவதாக மஸ்கெலியா பிரதேச சபை தெரிவித்துள்ளது.

எகோ ஸ்பின்ட்லஸ் நிறுவனமானது  4 வருடங்களாக இந்த பிளாஸ்டிக் கழிவகற்றம் வேலையை முன்னெடுத்து வருவதுடன், இங்கு சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளில் ஒரு தொகுதியை ஹொரனையிலுள்ள தமது மீள்சுழற்சி நிறுவனத்துக்கு அனுப்பி வைப்பதுடன், மிகுதி மஸ்கெலியா பிரதேச சபையிடம் கையளிப்பதாகவும் எகோ ஸ்பின்ட்லஸ் நிறுவனத்தின் முகாமைப்பிரிவின் சிரேஸ்ட திட்ட அதிகாரி சுபுன் லக்மால் தெரிவித்தார்.

இவ்வாறு தொன் கணக்கில் சேகரிக்கப்படும் கழிவுகள் தமது நிறுவனத்தால் ஹொரனையிலுள்ள தமது மீள்சுழற்சி தொழிற்சாலை மூலம்  நைலோன் நூல், சுத்திகரிக்கும் பணிகளுக்கான உபகரணங்கள் என்பவை தயாரிக்கப்பட்டு அவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.

மேலும் நல்லூர், தலவில திருத்தலங்களில் வருடாந்தம் நடைபெறும் உற்சவங்களின் போது சுற்றாடலில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களையும் தமது நிறுவனம் சேகரிப்தாகத்தெரிவித்த அவர், இம்முறை இந்தப் பணிகளில் எலிபன்ட்ஹவஸ் நிறுவனமும் இணைந்து  பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் பணியை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது என்றார்.

குறித்த எகோ ஸ்பின்ட்லஸ் நிறுவனத்தின் தகவல்களுக்கு அமைய,கடந்த 2022ஆம் ஆண்டு130,000 பிளாஸ்டிக் போத்தல்கள் சிவனொளிபாதமலை பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்டதாகவும் இம்முறை இதுவரை 56,000 பிளாஸ்டிக் போத்தல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நல்லூர், தலவில திருத்தலங்களில் வருடாந்தம் நடைபெறும் உற்சவங்களின் போது சுற்றாடலில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களையும் தமது நிறுவனம் சேகரிப்தாகத் தெரிவித்த அவர், இம்முறை இந்தப் பணிகளில் எலிபன்ட்ஹவஸ் நிறுவனமும் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் பணியை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது என்றார்.

குறித்த எகோ ஸ்பின்ட்லஸ் நிறுவனத்தின் தகவல்களுக்கு அமைய, கடந்த 2022ஆம் ஆண்டு 130,000 பிளாஸ்டிக் போத்தல்கள் சிவனொளிபாதமலை பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்டதாகவும் இம்முறை இதுவரை 56,000 பிளாஸ்டிக் போத்தல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை ஆரம்பிக்கப்பட்டு 4 மாதங்களை நிறைவடையும் தருவாயில் இதுவரை 10 தொன்னுக்கு அதிகமான பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட உக்கா கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன என நல்லதண்ணி மீள்சுழற்சி நிலையத்துக்கு பொறுப்பான அதிகாரி ஏ.டபிள்யு. ஹேமந்த தெரிவித்தார்.

இலங்கையில் பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தலைத் தடுப்பதற்காக பொலித்தீன் அல்லது சில பொலித்தீன் உற்பத்திகளுக்கான மைக்ரோனை 20 அல்லது அதற்கு குறைவாக பயன்படுத்துவதை தடைசெய்யும் உத்தரவு, 2017 செப்டம்பர் முதலாம் திகதி வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டதுடன்,  உணவு பொதி செய்யப்பயன்படும் லன்ச்சீட்,  குரோசரி பேக், சொப்பின் பேக் உற்பத்தி, விற்பனை மற்றும்  பயன்பாட்டுக்கும்  தடை விதிக்கப்பட்டது.

அத்துடன்,  பிளாஸ்டிக் கழிவுகளை திறந்த இடங்களில் எரிப்பதற்கு தடை செய்வதற்கான வர்த்தமானியும் வெளியிடப்பட்டதுடன், கொண்டாட்டங்களின் போது பொலித்தீன் பயன்பாட்டை தடுத்தல் போன்ற தடையுத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

ஆனால் எத்தனை தடையுத்தரவுகளை பிறப்பித்தாலும் இவற்றை தடை செய்வதற்கான எத்தனை வர்த்தமானி அறிவித்தல்கள் வெளிவந்தாலும் இலங்கையில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளால் சுற்றாடல் நாளுக்கு நாள் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருவதை தவிர்க்க முடியாதிருக்கின்றது.

குறித்த உக்காத பிளாஸ்டிக் கழிவுகளானது, வாழ்விடங்கள் மற்றும் இயற்கை செயற்பாடுகளை மாற்றியமைப்பதுடன், காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப சுற்றுச் சூழல் அமைப்புகளின் திறனையும் குறைக்கின்றது.

அத்துடன் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரங்கள், உணவு உற்பத்தி திறன்கள் மற்றும் சமூக நல்வாழ்வை நேரடியாக பாதிப்பதுடன், புற்றுநோய் உள்ளிட்ட பல தீவிர நோய்களையும் மனிதனுக்கு ஏற்படுத்துகின்றது.

உலகளவில் சுமார் 368 மில்லியன் தொன் பிளாஸ்டிக் உற்பத்தி ஆண்டு தோறும் முன்னெடுக்கப்படுவதுடன் இதில் இலங்கை தற்போது 300,000 மெட்றிக் தொன் பிளாஸ்டிக் மூலப்பொருட்களை பல்வேறு பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் மொத்த பிளாஸ்டிக் கழிவுகளில் 32 சதவீதம் சேகரிக்கப்படுவதுடன் அதில் 4 சதவீதம் மாத்திரமே மீள்சுழற்சி செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் 68 சதவீத பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படாத நிலையில் 44 சதவீதம் வெளிப்படையாக எரிக்கப்படுவதுடன், 24 சதவீதம் நிலம் மற்றும் நீர் நிலைகளை மாசடையச் செய்கின்றது.

எனவே எமக்கு கிடைத்த இயற்கையின் கொடையை எதிர்கால சந்ததியினரும் அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குவது இப்போதைய தலைமுறையின் தலையாய கடமை என்பதை உணர்ந்து சிவனொளிபாதமலை உள்ளிட்ட புனித ஸ்தலங்களை அண்மித்த பகுதிகளிலும் ஏனைய பெறுமதிமிக்க இயற்கை வளங்கள் நிறைந்த இடங்களிலும் பிளாஸ்டிக் உக்காத கழிவுகளை வீசுவதைத் தவிர்ப்பது இலங்கைப் பிரஜைகள் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT