தாஜுதீன் கொலைச் சந்தேகத்துக்குரிய 3 வாகனங்கள் ஏனைய குற்றச்செயல்களிலும் பயன்படுத்தப்பட்டமை அம்பலம்
பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் படுகொலை தொடர்பான விசாரணைகளில், அக்கொலையுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 03 வாகனங்கள் ஏனைய பல குற்றச்செயல்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த 03 வாகனங்களும் அப்போதைய முதல்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் அவரது புதல்வர் யோஷித ராஜபக்ஷ ஆகியோரின் பாதுகாப்புக்காக ஜனாதிபதி செயலகத்தால் வழங்கப்பட்ட 'டபுள்-கேப்' (double-cab) ரக வாகனங்கள் எனக் கூறப்படுகின்றது.
மேற்படி டபள் கெப் வாகனங்கள் WP PD 79–, WP PD 80– மற்றும் WP GB 05– ஆகிய பதிவு எண்களைக் கொண்டவை என்பதுடன், தாஜுதீன் படுகொலையுடன் இவை நேரடியாகத் தொடர்புபட்டிருப்பது தொடர்பான தகவல்கள் கடந்த விசாரணைகளின்போதே வெளிவந்திருந்தன.
இந்நிலையில், குறித்த வாகனங்களின் பயணப் பதிவுப் புத்தகங்களை பரிசோதித்தபோது அவற்றில் பாரிய முறைகேடுகள் காணப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சில பயணப் பதிவுப் புத்தகங்கள் காணாமல் போயுள்ளதாகவும், பேணப்பட்டு வந்த பதிவுகளில் பல குறைபாடுகள் காணப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
அண்மைய விசாரணைகளின்படி, இந்த மூன்று வாகனங்களும் பல்வேறு தரப்பினராலும் ஏனைய பல குற்றச்செயல்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளமை பற்றிய விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
அதேவேளை, 2012ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி தாஜுதீனின் மரணம் வெளிச்சத்துக்கு வந்த இரவில் ஜனாதிபதி செயலகத்துக்குள் நுழைந்த மேலும் 05 வாகனங்கள் தொடர்பிலும் விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. குறித்த வாகனங்கள் WP LV 05, WP PD 13, WP KA 98, WP KD 01 மற்றும் WP PA 72 ஆகிய பதிவு எண்களைக் கொண்டவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த ஐந்து வாகனங்களுக்காகப் பேணப்பட்ட பயணப் பதிவுப் புத்தகங்களிலும் கடுமையான முறைகேடுகள் மற்றும் குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விசாரணைத் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.