'தக் லைப்' விமர்சனம் - படம் எப்படி இருக்கிறது? 

டெல்லியில் தாதாக்களாக வலம் வரும் கமல்ஹாசன் - மகேஷ் மஞ்சரேக்கர் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. ஒரு சமாதான பேச்சுவார்த்தையின் போது கமல்ஹாசனை கொல்ல சதி நடக்கிறது. 

'தக் லைப்' விமர்சனம் - படம் எப்படி இருக்கிறது? 
ADVERTISEMENT
ADVERTISEMENT

டெல்லியில் தாதாக்களாக வலம் வரும் கமல்ஹாசன் - மகேஷ் மஞ்சரேக்கர் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. ஒரு சமாதான பேச்சுவார்த்தையின் போது கமல்ஹாசனை கொல்ல சதி நடக்கிறது. 

அப்போது சிறுவனாக இருக்கும் சிம்புவை வைத்து கமல்ஹாசன் அந்த சதியிலிருந்து தப்புகிறார். அப்போது முதல் சிம்பு கமல்ஹாசன் உடன் வளர்கிறார். சிம்புவை தனக்கு அடுத்து தொழிலில் இறக்க கமல்ஹாசன் விரும்புகிறார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஒரு கட்டத்தில் சிம்பு தனக்கு எதிராக செயல்படுவதாக கமல்ஹாசன் சந்தேகப்படுகிறார். இது தெரிந்து சிம்புவும் வருத்தம் கொள்கிறார். சூழ்நிலையை பயன்படுத்தி சிம்புவை கமல்ஹாசனுக்கு எதிராக கூட்டாளிகள் திசைதிருப்புகிறார்கள்.

இதனால் கமல்ஹாசனை கொலை செய்து அவரது இடத்தை தட்டிப் பறிக்க சிம்பு ஆயத்தமாகிறார். அதற்கான சதி திட்டம் தீட்டுகிறார். சிம்புவின் சதி திட்டம் பலித்ததா? கமல்ஹாசனுக்கு என்ன ஆனது? என்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்கிறது மீதி கதை.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தாதாவாக வலம் வரும் கமல்ஹாசன் உடல் மொழியிலும், பேச்சிலும் மிரட்டி இருக்கிறார். இளமையான தோற்றத்தில் வரும்போது நாயகன் படத்தை நினைவு கூறுகிறார். மனைவியாக அபிராமி, காதலியாக திரிஷா என காதல் மன்னனாகவும் கலக்குகிறார். சண்டைக் காட்சிகளில் பொறி பறக்கிறது.

ஆர்ப்பரிக்கும் நடிப்பை காட்டி சிம்பு அடடா சொல்ல வைக்கிறார். கமலுடன் அவர் வரும் காட்சிகள் அத்தனையும் ரசிக்கும்படியாக இருக்கிறது. கமல்ஹாசனை தீர்த்து கட்ட திட்டம் போடும்போது வில்லத்தனத்தால் பயமுறுத்துகிறார். திரிஷாவின் வனப்பான அழகு மனதைக் கொள்ளை அடிக்கிறது. கமல்ஹாசன் உடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.

அபிராமி குடும்ப பாங்கான முகமாக வருகிறார். இரண்டாம் பாதியில் கலங்கடிக்கும் நடிப்பால் கைதட்டல் பெறுகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, ரவுடிகளாக வரும் நாசர், ஜோஜூ ஜார்ஜ், சின்னி ஜெயந்த், வையாபுரி, வடிவுக்கரசி என அனைவருமே அவரது கதாபாத்திரங்களுக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.

ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு மிரட்டல் தருகிறது. கேமராவை 360 டிகிரியில் சுழற்றி வித்தை காட்டியுள்ளார். ஏ.ஆர் ரகுமானின் இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது. பின்னணி இசையும் பிரமாதம்.

முன்கூட்டியே கணிக்க கூடிய சில காட்சிகள் பலவீனம் என்றாலும் பரபரப்பான திரைக்கதை அதை மறக்கடிக்க செய்கிறது. கமல்ஹாசன் - சிம்பு கூட்டணி நடிப்பு படத்தை தாங்கி பிடித்துள்ளது. வழக்கமான கேங்ஸ்டர் கதை என்றாலும், கமல்ஹாசன் என்ற ஆளுமையை சரியாக பயன்படுத்தி வித்தியாசமான கதைக்களத்தில் படத்தை நகர்த்தி, மீண்டும் தனது முத்திரையை ஆழமாக பதித்துள்ளார் மணிரத்னம்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT