கார் - டிப்பர் மோதி விபத்து: அறுவை சிகிச்சை நிபுணர் உயிரிழப்பு
பொலன்னறுவை வைத்தியசாலையில் பணியாற்றிய 50 வயது அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர், மின்னேரியாவில் நேற்று வெள்ளிக்கிழமை (06) மாலை இடம்பெற்ற கார் மற்றும் டிப்பர் லாரி மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளார்.
பொலன்னறுவை - ஹபரணை வீதியில், 39ஆவது மைல்கல் பகுதிக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மின்னேரியாவிலிருந்து ஹபரணை நோக்கிச் சென்ற கார், எதிரே வந்த டிப்பர் லாரியுடன் மோதியுள்ளது.
விபத்தில் காயமடைந்த இரு வாகன ஓட்டுநர்களும் ஹபரணை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், காரை ஓட்டிச் சென்றவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
உயிரிழந்தவர் பொலன்னறுவை, நியூ டவுன் பகுதியில் வசித்து வந்த அறுவை சிகிச்சை நிபுணர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
டிப்பர் லாரியின் ஓட்டுநர் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து மின்னேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.