அரண்டு போன டிரம்ப்.. அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த புதின்.. சத்தமின்றி புதிய சாதனை படைத்த ரஷ்யா!

மத்திய கிழக்குப் போர் மற்றும் அமெரிக்கத் தளர்வுகளால் ரஷ்ய ரூபிள் உலகின் வேகமாகப் பலமடைந்த நாணயமாக உருவெடுத்துள்ளது.

அரண்டு போன டிரம்ப்.. அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த புதின்.. சத்தமின்றி புதிய சாதனை படைத்த ரஷ்யா!
ADVERTISEMENT
ADVERTISEMENT

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக உலகெங்கும் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இந்தியா உட்பட பல நாடுகள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மிகப் பெரிய லாபத்தை ரஷ்யா அள்ளியுள்ளது. அமெரிக்க டாலருக்கு அதிர்ச்சி தரும் வகையில் ரஷ்யாவின் ரூபிள் நாணயம் உலகின் வேகமாகப் பலமடைந்த நாணயமாக மாறியுள்ளது.

கடந்த பிப்ரவரி 2022ல் உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான போரைத் தொடங்கியபோது, மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. ரஷ்யப் பொருளாதாரம் அழியப்போகிறது, ரூபிள் குப்பையாகப் போகிறது என்றெல்லாம் பலரும் கணித்திருந்தனர். ஆனால் நான்கு ஆண்டுகள் கழித்து நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சர்வதேச ஊடகமான புளூம்பெர்க் வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமெரிக்க டாலருக்கு எதிராக ரஷ்ய ரூபிள் சுமார் 12 சதவீதம் வரை பலமடைந்துள்ளது. தற்போது ஒரு டாலருக்கு நிகரான ரூபிளின் மதிப்பு 72.6 ஆக உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி 2023க்குப் பிறகு ரூபிள் இந்த அளவுக்கு வலிமையான நிலையை அடைவது இதுவே முதல் முறையாகும். தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக ரூபிள் வீழ்ச்சியடையும் என்ற சந்தை வல்லுநர்களின் கணிப்புகளைப் பொய்யாக்கும் வகையில் இந்த வலுவூட்டல் அமைந்துள்ளது.

இந்த வெற்றிக்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, மத்திய கிழக்குப் போரின் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியதால் உலகளவில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், ரஷ்ய எண்ணெய் மீது விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளை அமெரிக்கா வேறு வழியின்றித் தளர்த்தியது. இதன் விளைவாக ரஷ்யக் கச்சா எண்ணெய் வர்த்தகம் உச்சத்தை எட்டியது.

கடந்த மார்ச் மாதத்தில் பீப்பாய் ஒன்றுக்கு 44.6 டாலராக இருந்த கச்சா எண்ணெயின் சராசரி விலை, ஏப்ரலில் 94.9 டாலராக எகிறியது. தற்போது அது 100 டாலரைத் தாண்டி வர்த்தகமாகிறது. இந்த விலையேற்றம் ரஷ்யாவுக்குப் பெரும் லாபத்தைத் தேடித் தந்துள்ளது. ரஷ்யாவின் முக்கிய ஏற்றுமதி நிறுவனங்கள் ஏப்ரல் மாதத்தில் மட்டும் தங்களின் வெளிநாட்டு விற்பனையை மூன்று மடங்கு உயர்த்தி 7.3 பில்லியன் டாலராகப் பெருக்கிக் கொண்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இரண்டாவதாக, பல்வேறு நாடுகளுடன் ரஷ்யா போட்ட ஒப்பந்தங்கள் காரணமாக, தனது இறக்குமதிப் பொருட்களுக்கான கட்டணத்தை ரஷ்யா தனது சொந்த நாணயமான ரூபிள் மூலமாகவே செலுத்தி வருகிறது. ரஷ்யாவின் இறக்குமதிப் பொருட்களுக்கான தொகையில் கிட்டத்தட்ட 60 சதவீதம் தற்போது நேரடியாக ரூபிள் நாணயத்திலேயே செலுத்தப்படுகிறது. மேலும், ரஷ்ய மத்திய வங்கியின் அதிக வட்டி விகிதங்கள் காரணமாக வெளிநாட்டு நாணயங்களுக்கான தேவை உள்நாட்டில் பெருமளவு குறைந்துள்ளது.

ரஷ்யாவின் நிதி விதிகளின்படி, கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 59 டாலருக்கு மேல் செல்லும்போது கிடைக்கும் உபரி வருவாயைக் கொண்டு, நாட்டின் அவசரகால நிதியான 'தேசிய நல்வாழ்வு நிதிக்காக' சர்வதேச கரன்கி மற்றும் தங்கம் வாங்கப்படும். கடந்த ஜூன் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக, இந்த மே மாதத்தில் ரஷ்யா 110 பில்லியன் ரூபிள்களை (1.5 பில்லியன் டாலர்) இந்த நிதிக்காக ஒதுக்கியுள்ளது.

இருப்பினும், ரூபிள் நாணயம் அளவுக்கு அதிகமாகப் பலமடைவது ரஷ்யாவின் ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு புதிய தலைவலியைக் கொடுத்துள்ளது. டாலருக்கு நிகராக ரூபிள் வலுவாக இருப்பதால், அவர்கள் டாலரில் ஈட்டும் வருவாயை ரூபிளாக மாற்றும்போது குறைந்த தொகையே கிடைக்கிறது. இது நிறுவனங்களின் லாபத்தையும், அரசுக்குக் கிடைக்கும் வரி வருவாயையும் ஓரளவு பாதிக்கிறது. ஆனால் பொருளாதாரம் தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும், இதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்றும் ரஷ்ய நிதி அமைச்சர் ஆண்டன் சிலுவானோவ் தெளிவுபடுத்தியுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT