பிரபல நடிகை மிமி சக்ரவர்த்திக்கு டும் டும் டும்... பதிவுத் திருமணப் புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சி
வங்காளத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரும் முன்னாள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான மிமி சக்ரவர்த்தி, தனது திருமண வாழ்க்கை தொடர்பான மகிழ்ச்சியான தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
37 வயதுடைய மிமி சக்ரவர்த்தி, திருமணப் பதிவு ஆவணங்களில் தனது வருங்காலத் துணையுடன் கையொப்பமிடும் புகைப்படங்களை நேற்று (26) இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மூன்று சிவப்பு நிற இதயக் குறியீடுகளுடன் அவர் பகிர்ந்துள்ள இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. திருமணப் பதிவு தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ள மிமி, தனது வருங்காலத் துணையின் முகத்தை வெளிப்படுத்தவில்லை.
எனினும், அவர் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவுகளின் ஊடாக அவரது துணையின் பெயர் சித்தார்த்த தத்தா என்பது தெரியவந்துள்ளது.

கடல்சார் பொறியியலாளராகப் பணியாற்றும் சித்தார்த்த தத்தா, சமூக வலைத்தளங்களில் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பொதுவெளியில் பகிர்ந்துகொள்வதைத் தவிர்த்து வருகின்றார். அவரது இன்ஸ்டாகிராம் கணக்கும் தனிப்பட்ட கணக்காகவே உள்ளது.
ஊடகத் தகவல்களின்படி, மிமி சக்ரவர்த்தி மற்றும் சித்தார்த்த தத்தா ஆகியோரின் பாரம்பரியத் திருமண நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி மேற்கு வங்க மாநிலத்தின் காலிம்பொங் பகுதியில் நடைபெறவுள்ளது. திருமணக் கொண்டாட்டங்கள் மூன்று நாட்களுக்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து மிமியின் சொந்த ஊரில் திருமண வரவேற்பு நிகழ்வொன்றும் இடம்பெறவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
மேலும், வங்காளத் திரையுலக நண்பர்கள் மற்றும் சக கலைஞர்களுக்காக டிசம்பர் 11ஆம் திகதி கொல்கத்தாவில் விசேட வரவேற்பு நிகழ்வொன்றை நடத்த அவர் திட்டமிட்டுள்ளதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், திருமண நிகழ்வுகள் தொடர்பான முழுமையான விபரங்களை மிமி இதுவரை பகிரங்கமாக அறிவிக்கவில்லை. மிமி சக்ரவர்த்தியின் திருமணப் பதிவு தொடர்பான புகைப்படங்களுக்கு வங்காளத் திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ஜீத், நடிகைகளான சுபஸ்ரீ கங்குலி மற்றும் பர்னோ மித்ரா ஆகியோர் தமது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர். நடிகை ஒய்ந்திரிலா சென் இதயக் குறியீடுகளின் ஊடாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதுடன், சோஹினி சர்க்கார் வங்காள மொழியில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
‘Gaaner Opare’ தொலைக்காட்சித் தொடரில் பூபே என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமடைந்த மிமி சக்ரவர்த்தி, 2012ஆம் ஆண்டு வெளியான ‘Bapi Bari Jaa’ திரைப்படத்தின் ஊடாக சினிமாவில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து ‘Bojhena Shey Bojhena’, ‘Golpo Holeo Shotti’, ‘Khaad’, ‘Shudhu Tomari Jonyo’, ‘Posto’, ‘Dhananjay’, ‘Dracula Sir’ மற்றும் ‘Raktabeej’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

‘SOS Kolkata’, ‘Baazi’, ‘Shastry Viruddh Shastry’, ‘Toofan’ மற்றும் ‘Queens’ ஆகிய திரைப்படங்களிலும் அவர் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
திரைப்படங்களுக்கு மேலதிகமாக இணையத் தொடர்களிலும் கவனம் செலுத்திவரும் மிமி, ‘Jaha Bolibo Shotto Bolibo’ மற்றும் ‘Dainee’ உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார்.
இறுதியாக ஸ்ரீஜித் முகர்ஜியின் இயக்கத்தில் வெளியான ‘Emperor vs Sarat Chandra’ திரைப்படத்தில் நடித்திருந்த அவர், அடுத்ததாக ZEE5 தளத்தில் வெளியாகவுள்ள வங்காள மொழி இணையத் தொடரான ‘Tandob’ இல் தோன்றவுள்ளார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.