வங்கி கணக்கு தொடங்குவது உள்ளிட்ட பல சேவைகளுக்கு நவம்பர் 1 முதல் TIN இலக்கம் கட்டாயம்
எதிர்வரும் நவம்பர் 01ஆம் திகதி முதல் குறிப்பிட்ட சில முக்கிய அரச மற்றும் நிதிச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. நாட்டின் வரி நிர்வாகத்தை வலுப்படுத்தும் நோக்கிலும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, வங்கி அல்லது ஏதேனும் நிதி நிறுவனமொன்றில் புதிதாக கணக்கொன்றை ஆரம்பிக்கும் போதும், உள்ளூராட்சி நிறுவனங்களிடம் இருந்து கட்டிட வரைபட அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் போதும், மோட்டார் வாகனத்தைப் பதிவு செய்யும் போதும் மற்றும் மோட்டார் வாகன உரிமத்தைப் புதுப்பிக்கும் போதும் இந்த வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், காணி அல்லது காணியின் உரிமையைப் பதிவு செய்தல், வர்த்தக நிலையங்கள் மற்றும் வியாபாரங்களைப் பதிவு செய்தல், இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமொன்றின் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல் மற்றும் புதிய கடன் அட்டையைப் பெற்றுக்கொள்ளுதல் ஆகிய நடவடிக்கைகளின் போதும் செல்லுபடியாகும் TIN இலக்கத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த சேவைகளை வழங்குவதற்கு முன்னர், பயனாளர்களால் சமர்ப்பிக்கப்படும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் செல்லுபடியானதா என்பதைச் சம்பந்தப்பட்ட அரச மற்றும் நிதி நிறுவனங்களின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் முறையாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரை வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளாத நபர்கள் உடனடியாக அதனைப் பெற்றுக்கொள்ளுமாறும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையவழி இ-சேவை தளம் ஊடாக இதற்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் அத்திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
இணையவழி இ-சேவை தளம் - https://eservices.ird.gov.lk/registration/tinregistration/showrequestheader
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.