ஐ.பி.எல். 2027: மீண்டும் மும்பை அணியின் தலைவராகிறாரா ரோஹித் சர்மா? மர்மப் பதிவால் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக ரோஹித் சர்மா மீண்டும் பொறுப்பேற்பாரா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள மர்மமான புகைப்படமொன்று அணித்தலைவர் மாற்றம் தொடர்பான விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
ஐ.பி.எல். வரலாற்றில் ஐந்து முறை சம்பியன் பட்டத்தை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, எதிர்வரும் தொடருக்கான அணித்தலைவர் யார் என்பதை இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை மும்பை இந்தியன்ஸ் அணி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், அசைவூட்ட வடிவிலான கையொன்று அணியின் தொப்பியைப் பிடித்திருப்பதைப் போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தது.
குறித்த புகைப்படம் தொடர்பில் அணி நிர்வாகம் எவ்வித விளக்கத்தையும் வழங்காத நிலையில், ரோஹித் சர்மா மீண்டும் அணித்தலைவராக நியமிக்கப்படுவதற்கான முன்னறிவிப்பாக இது இருக்கலாம் என ரசிகர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
குறிப்பாக, 2024ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி வென்றபோது, ரோஹித் சர்மா இந்திய தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டாடிய தருணத்துடன் இந்தப் புகைப்படத்தைச் சில ரசிகர்கள் ஒப்பிட்டுள்ளனர்.

அத்துடன், 2013ஆம் ஆண்டு முதன்முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ரோஹித் சர்மா, அந்த அணிக்கு முதலாவது ஐ.பி.எல். சம்பியன் பட்டத்தைப் பெற்றுக்கொடுத்த தருணத்தையும் ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
இதற்கிடையில், மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளதாகவும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வீரர்கள் பரிமாற்றம் தொடர்பான தகவல்களும் மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியை வலுப்படுத்தியுள்ளன.
அணியின் தலைமைப் பொறுப்பை மீண்டும் ரோஹித் சர்மாவிடம் ஒப்படைப்பது தொடர்பில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் பரிசீலித்து வருவதாகப் பல்வேறு ஊடக அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹித் சர்மாவின் தலைமையின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை ஐ.பி.எல். சம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும், சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட புகைப்படம் ரோஹித் சர்மாவின் மீள்வருகையைக் குறிக்கின்றதா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்தகட்ட அறிவிப்பை கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.