11 வயதுச் சிறுவனைத் துஷ்பிரயோகம் செய்த வழக்கு! தேரருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை உறுதி!

அம்பாறை மாவட்ட விகாரையொன்றில் 11 வயதுச் சிறுவனைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் எத்பிட்டியே சந்திரானந்த தேரருக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டுகால கடூழியச் சிறைத் தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

11 வயதுச் சிறுவனைத் துஷ்பிரயோகம் செய்த வழக்கு! தேரருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை உறுதி!
ADVERTISEMENT
ADVERTISEMENT

அம்பாறை மாவட்டத்திலுள்ள விகாரையொன்றில் 11 வயதுச் சிறுவனைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பௌத்த தேரருக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டுகால கடூழியச் சிறைத் தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

தனது தண்டனை மற்றும் தீர்ப்புக்கு எதிராக எத்பிட்டியே சந்திரானந்த தேரர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான பி. குமாரரத்னம் மற்றும் ஆர்.பி. ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த 17ஆம் திகதி இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பாதிக்கப்பட்ட சிறுவன் தனது பெற்றோருடன் சிவ்மினிசேய விகாரைக்குச் சென்றிருந்த போது, சிறுவர்களைத் துறவறத்தில் இணைத்துக் கொள்ளுமாறு விகாராதிபதி அழைப்பு விடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து சாமணேரராக (துறவியாக) விகாரையில் தங்கியிருந்த அச்சிறுவன், 2014ஆம் ஆண்டில் சுமார் 10 மாத காலப்பகுதியில் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

குறித்த விகாரையில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்தே இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வழக்கின் விசாரணையின் போது, 19 வயதில் சாட்சியமளித்த பாதிக்கப்பட்ட இளைஞன், தேரரின் பாதுகாப்பிலிருந்த போது தனக்கு இழைக்கப்பட்ட துஷ்பிரயோகங்கள் குறித்து நீதிமன்றத்தில் விவரித்தார். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவச் சான்றுகளும் அரச தரப்பு வழக்கை உறுதிப்படுத்தின.

இதனையடுத்து, பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் தேரரைக் குற்றவாளியாகக் கண்ட அம்பாறை மேல் நீதிமன்றம், அவருக்கு 14 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்ததுடன், 40,000 ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்டவருக்கு 500,000 ரூபாய் இழப்பீடும் வழங்குமாறு உத்தரவிட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அரச தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி வழக்கை நிரூபிக்கத் தவறிவிட்டதாகவும், பிரதிவாதியின் சாட்சியங்கள் முறையாகக் கவனத்தில் கொள்ளப்படவில்லை எனவும், தண்டனை அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்துத் தேரர் மேன்முறையீடு செய்திருந்தார்.

எனினும், மேல் நீதிமன்ற நீதிபதி சாட்சியங்களைச் சரியாக மதிப்பீடு செய்துள்ளதாகத் தெரிவித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், தேரரின் வாதங்களை நிராகரித்தது. சிறுவன் மீது நம்பிக்கைக்குரிய மற்றும் அதிகாரமிக்க பொறுப்பில் இருந்த தேரர், அந்த நிலையைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அத்துடன், பாதிக்கப்பட்டவர் எவ்விதப் பெரிய முரண்பாடுகளுமின்றி உறுதியான சாட்சியத்தை வழங்கியுள்ளதாகவும் நீதிமன்றம் அவதானித்தது.

இதற்கமைய, மேன்முறையீட்டைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், 14 ஆண்டுகால சிறைத் தண்டனையை உறுதி செய்ததுடன், மேல் நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்ட 2026 ஜனவரி 16ஆம் திகதியிலிருந்து குறித்த தண்டனைக் காலம் கணக்கிடப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT