அனிருத் – காவ்யா மாறன் திருமண அழைப்பிதழ் வைரல்: வெளியான சுவாரசிய தகவல்கள்!
பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
பாரம்பரிய அழகையும் நவீன நேர்த்தியையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அழைப்பிதழின் வடிவமைப்பு குறித்து அதன் வடிவமைப்பாளர் ரஞ்சனி ஐயங்கார் பகிர்ந்த தகவல்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.
பொதுவாகப் பிரபலங்களின் திருமண அழைப்பிதழ்கள் அதிகப்படியான அலங்காரங்கள், பிரகாசமான வண்ணங்கள் மற்றும் ஆடம்பரமான வடிவமைப்புகளுடன் தயாரிக்கப்படுவது வழக்கம்.
ஆனால், அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு அழைப்பிதழில் இதற்கு மாறாக விண்டேஜ் கிளாசிக் பாணிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
'Pink Whistle Man' நிறுவனத்தைச் சேர்ந்த ரஞ்சனி ஐயங்கார் இந்த அழைப்பிதழை வடிவமைத்துள்ளார்.

பழங்கால ஐரோப்பிய அலங்காரக் கலையான பரோக் (Baroque) பாணியின் தாக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் நுணுக்கமான வேலைப்பாடுகள், பாரம்பரிய முத்திரை வடிவம் மற்றும் நேர்த்தியான வண்ண அமைப்பு இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக பவுடர் ப்ளூ (Powder Blue), ஐவரி (Ivory) மற்றும் சில்வர் (Silver) ஆகிய மூன்று வண்ணங்கள் மட்டுமே வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதிகப்படியான வண்ணங்களைப் பயன்படுத்தாமல், மூன்று நிறங்களுக்குள் அழைப்பிதழின் முழு அழகையும் வெளிப்படுத்துவது தனக்கு ஒரு சுவாரசியமான சவாலாக அமைந்ததாக வடிவமைப்பாளர் ரஞ்சனி ஐயங்கார் தெரிவித்துள்ளார்.
விருந்தினர்கள் நிகழ்வு முடிந்த பின்னரும் நினைவாகப் பாதுகாத்து வைத்திருக்கக்கூடிய வகையில் அழைப்பிதழை உருவாக்குவதே முக்கிய நோக்கமாக இருந்ததாகவும் அவர் விளக்கியுள்ளார்.
அழைப்பிதழின் வடிவமைப்பில் காவ்யா மாறன் ஆர்வத்துடன் பங்கேற்றதாகவும், நுணுக்கமான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியதாகவும் வடிவமைப்பாளர் கூறியுள்ளார்.
மேலும், மணமக்களின் தனிப்பட்ட காதல் கதையை மையமாகக் கொண்ட அலங்காரங்களுக்குப் பதிலாக, காலத்தால் அழியாத பாரம்பரிய நேர்த்திக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சனி ஐயங்கார் இதற்கு முன்னர் ராதிகா மெர்ச்சென்ட், அலன்னா பாண்டே உள்ளிட்ட பல பிரபலங்களின் திருமண அழைப்பிதழ்களை வடிவமைத்த அனுபவம் கொண்டவர்.
பிரபலங்கள் பல்வேறு ஆடம்பர நிகழ்வுகளைப் பார்த்துப் பழகியிருப்பதால், தங்களது தனிப்பட்ட நிகழ்வுகளில் எளிமையான அதேவேளை தனித்துவமான வடிவமைப்புகளை விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், அனிருத் மற்றும் காவ்யா மாறனின் திருமண நிகழ்வுகள் நவம்பர் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் கிரீஸ் நாட்டில் நடைபெறலாம் என ஊடகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட நண்பர்கள் மாத்திரம் பங்கேற்கும் வகையில் திருமண நிகழ்வுகள் திட்டமிடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
எனினும், கிரீஸில் திருமணம் நடைபெறும் திகதி மற்றும் இடம் தொடர்பான தகவல்கள் மணமக்களால் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தப்படவில்லை.
அதேவேளை, திருமண வரவேற்பு நிகழ்வு நவம்பர் 21ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளதாக தெலங்கானா முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காவ்யா மாறனின் பெற்றோரான கலாநிதி மாறன் மற்றும் காவேரி மாறன் ஆகியோர் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியைச் சந்தித்து திருமண வரவேற்பு நிகழ்வுக்கான அழைப்பிதழை வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், திருமண நிகழ்வுகள் குறித்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு அழைப்பிதழின் விண்டேஜ் வடிவமைப்பு சமூக வலைத்தளங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.