டிஜிட்டல் யுகத்தில் இலங்கையின் தேர்தல் அமைதிக்காலம் சவாலானது – DRI ஆய்வு சுட்டிக்காட்டுகிறது

தேர்தல் நாள் நெருங்க நெருங்க அரசியல் விளம்பரங்கள் தீவிரமடைந்து, அமைதிக்காலம் தொடங்குவதற்கு சற்று முன்னதாக உச்சத்தை எட்டின.
டிஜிட்டல் யுகத்தில் இலங்கையின் தேர்தல் அமைதிக்காலம் சவாலானது – DRI ஆய்வு சுட்டிக்காட்டுகிறது
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

2024 பாராளுமன்றத் தேர்தலின் அமைதிக்காலத்தின் போது Facebook மற்றும் Instagramஇல் 6,700 க்கும் மேற்பட்ட அரசியல் விளம்பரங்கள் சுழற்சியில் இருந்ததாக புதிய ஆய்வு வெளிப்படுத்துகிறது. இது அடுத்த தேர்தல் காலத்திற்கு முன்னதாக டிஜிட்டல் சட்ட அமுலாக்கம் குறித்த அவசர கேள்விகளை எழுப்புகிறது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கொழும்பு – ஒவ்வொரு தேர்தலின்போதும், இலங்கை மக்களுக்கு இரண்டு நாட்கள் தேர்தல் அமைதிக்காலம் என உறுதியளிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையகத்தால் வெளியிடும் ஊடக வழிகாட்டுதல்களின் கீழ், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் நள்ளிரவு முதல் வாக்குப்பதிவு முடியும் வரை 48 மணி நேர கட்டாய அமைதிக் காலம் அமுலில் இருக்கும். இதில் டிஜிட்டல் தளங்களில் பகிரப்படும் அரசியல் விளம்பரங்கள் உட்பட அனைத்து வகையான பிரச்சாரங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன. ஆனால் 2024 பாராளுமன்றத் தேர்தலின்போது, அந்த விளம்பரங்கள் முழுமையாக நிறுத்தப்படவில்லை.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மெட்டா விளம்பர நூலகத்தின் (Meta Ad Library) தரவுகளை அடிப்படையாகக் கொண்டு Democracy Reporting International (DRI) நிறுவனம் வெளியிட்ட ஆய்வின்படி, 2024 நவம்பர் பாராளுமன்றத் தேர்தலை ஒட்டிய ஆறு வார காலப்பகுதியில் Facebook மற்றும் Instagramஇல் 22,974 அரசியல் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் 6,712 விளம்பரங்கள் (சுமார் 29%), சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தப்பட்ட அமைதிக்காலத்தின் ஏதோ ஒரு கட்டத்தில் செயலில் இருந்துள்ளன. இதில் 1,142 விளம்பரங்கள் அந்த அமைதிக்கால இடைவெளிக்குள்ளேயே புதிதாக உருவாக்கப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரச்சினையின் அளவு

தேர்தல் நாள் நெருங்க நெருங்க அரசியல் விளம்பரங்கள் தீவிரமடைந்து, அமைதிக்காலம் தொடங்குவதற்கு சற்று முன்னதாக உச்சத்தை எட்டின. அமைதிக்காலம் நடைமுறைக்கு வந்த முதல் நாளான 2024 நவம்பர் 11 அன்று, மெட்டா தளங்களில் இருந்து 2,749 விளம்பரங்கள் மட்டுமே அகற்றப்பட்டிருந்தன, அதேவேளை 3,963 விளம்பரங்கள் தொடர்ந்து செயலில் இருந்தன. நவம்பர் 14 தேர்தல் நாளன்று கூட, 412 அரசியல் விளம்பரங்கள் பரப்பப்பட்டு வந்தன. சட்டத்தின்படி வாக்காளர்கள் எவ்வித தூண்டுதலுமின்றி சுயமாக சிந்திப்பதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில், இந்த விளம்பரங்கள் அவர்களைச் சென்றடைந்தன.

படம் 01: தேர்தல் அமைதிக் காலத்தில் செயலில் இருந்த மற்றும் நீக்கப்பட்ட அரசியல் விளம்பரங்களின் எண்ணிக்கை. மேலும் நாள் அடிப்படையில் நீக்கப்பட்ட விளம்பரங்களின் சதவீதம்.

அமைதிக்காலத்தின் போது செயலில் இருந்த விளம்பரங்களில் பெரும்பாலானவற்றை மெட்டா நிறுவனம் இறுதியில் அகற்றியது. 6,712 விளம்பரங்களில் சுமார் 6,300 (சுமார் 94%) விளம்பரங்கள் அமைதிக்காலத்தின் ஏதோ ஒரு கட்டத்தில் அகற்றப்பட்டுள்ளன. இருப்பினும், அந்த நடவடிக்கை உடனடியாகவோ அல்லது முழுமையாகவோ மேற்கொள்ளப்படவில்லை. இத்தகைய தாமதங்கள் காரணமாக, சட்டப்பூர்வமாக தடைசெய்யப்பட்ட காலப்பகுதியில் வாக்காளர்கள் இந்த பிரச்சாரங்களைக் சந்திக்க நேரிட்டது.

விளம்பரம் செய்தவர்கள் யார்?

தேர்தல் பிரச்சாரக் காலத்தில் செயலில் இருந்த 2,292 தனித்துவமான விளம்பரதாரர் கணக்குகளை இந்த ஆய்வு அடையாளம் கண்டுள்ளது. ஆயினும், மொத்த விளம்பரங்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவை (56.4மூ), பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சியுடனோ அல்லது வேட்பாளருடனோ நேரடித் தொடர்பில்லாத மூன்றாம் தரப்பு கணக்குகளால் வெளியிடப்பட்டவை. அடையாளம் காணப்பட்ட கட்சிகளில், ஐக்கிய மக்கள் சக்தி(SJB) மற்றும் புதிய ஜனநாயக முன்னணி (NDF) ஆகியன விளம்பரங்களின் எண்ணிக்கையில் முன்னிலையில் இருந்தன. SJB பிரச்சாரக் காலத்தில் 3,189 விளம்பரங்களையும், NDF 2,112 விளம்பரங்களையும் வெளியிட்டிருந்தன.

எனினும், விளம்பரங்களின் எண்ணிக்கை மட்டுமே அதன் தாக்கத்தை தீர்மானிப்பதில்லை என இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. SJB மற்றும் NDF அதிக எண்ணிக்கையிலான விளம்பரங்களை வெளியிட்டிருந்த போதிலும், ஒரு விளம்பரத்திற்கான சராசரி பார்வை எண்ணிக்கையின் (impressions) அடிப்படையில் ஐக்கிய ஜனநாயகக் குரல் (UDV - 87,344) மற்றும் சர்வஜன பலய (SB- 50,507) ஆகியன முன்னிலையில் இருந்தன. தேசிய மக்கள் சக்தி (NPP), ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான விளம்பரங்களைக் கொண்டிருந்த போதிலும், ஒரு விளம்பரத்திற்கு சராசரியாக 49,000 பார்வைகளைப் பெற்றிருந்தது. இது SJB மற்றும் NDFஆகிய இரண்டு கட்சிகளையும் விட அதிகமாகும்.

படம் 02: அரசியல் கட்சிகளின் அடிப்படையில் அரசியல் விளம்பரங்களின் எண்ணிக்கை

நிதிப் பின்னணி

இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட நிதி தொடர்பான தகவல்கள் மேலும் பல கேள்விகளை எழுப்புகின்றன. தரவுத்தளத்திலுள்ள அரசியல் விளம்பரங்களுக்காக 30 வௌ;வேறு நாணயங்களில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதன்மையான நாணயமாக அமெரிக்க டொலர் இருந்தது. மொத்த விளம்பரங்களில் 72 சதவீதத்திற்கும் அதிகமானவற்றுக்கு (16,694 விளம்பரங்கள்) அமெரிக்க டொலர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை ரூபாயானது 6,145 விளம்பரங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

படம் 03: நாணய வகைகளின் அடிப்படையில் அரசியல் விளம்பரங்களின் விநியோகம்

வெளிநாட்டு நாணயங்களைப் பயன்படுத்துவது எப்போதும் தவறான செயல் என்று கருத முடியாது என்றாலும், இது வெளிப்படைத்தன்மையில் உள்ள குறைபாடுகளையும், இலங்கையின் வாக்காளர்களை இலக்கு வைக்கும் விளம்பரதாரர்களை உறுதிப்படுத்துவதன் அவசியத்தையும் காட்டுகிறது.

மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள்

இங்குள்ள முக்கிய பிரச்சினை சட்டங்கள் இல்லாதது அல்ல, மாறாக தற்போதைய பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படும் டிஜிட்டல் தளங்களில் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாமையே ஆகும். சமூக ஊடக நிறுவனங்கள் இந்த அமைதிக்காலத்தை ஒரு ஆலோசனையாகக் கருதாமல், ஒரு கட்டாய விதியாகக் கருத வேண்டும். மேலும், தேர்தல் முடிந்த பிறகு தரவுகளை ஆய்வு செய்வதற்குப் பதிலாக, தேர்தல் நடக்கும் போதே அவற்றை கண்காணிப்பதற்கு ஏதுவாக அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தரவுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதியை டிஜிட்டல் தளங்கள் வழங்க வேண்டும்.

அடுத்த தேர்தலின் போது இந்த குறைபாடுகள் சரியான நேரத்தில் சரிசெய்யப்படுமா என்பது ஒரு சவாலாகும். டிஜிட்டல் தளங்கள் தமது கட்டமைப்புகளை தேர்தல் கால அட்டவணைக்கு ஏற்ப மாற்றியமைக்கவில்லை என்றால், அமைதிக்காலம் என்பது சட்டத்தில் மாத்திரம் இருக்கும் ஒரு விடயமாக மாறிவிடும்.

Democracy Reporting International (DRI) பற்றி: DRI என்பது உலகளவில் ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சுயாதீனமான, கட்சிசார்பற்ற அமைப்பாகும். இலங்கையில், DRI நிறுவனம் தவறான தகவல்களுக்கு எதிரான செயற்பாட்டுத் திறனை வலுப்படுத்துவதற்கும், ஜனநாயக நடைமுறைகளுக்கான நிறுவன மற்றும் சமூகப் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்கும் முன்னின்று செயற்படுகின்றது. 

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -