அதிவேக நெடுஞ்சாலை வருமானத்தில் 4.6 பில்லியன் ரூபாய் இழப்பு: தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்
2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான 4 ஆண்டுகள் மற்றும் 9 மாத காலப்பகுதியில், அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற நுழைவுச்சீட்டு முறைகேடுகள் காரணமாக, வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு 4,614 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமானம் இழக்கப்பட்டுள்ளதாக புதிய கணக்காய்வு அறிக்கையொன்றில் தெரியவந்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் 133.8 மில்லியனுக்கும் அதிகமான பிரவேச நுழைவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டிருந்த போதிலும், 18.2 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களுக்கு வெளியேறும் நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்டிருக்கவில்லை என தணிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, அதிவேக நெடுஞ்சாலை வருமானத்தில் நாளாந்தம் இழக்கப்பட்ட தொகை கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ரூபாயாகும் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
பல்வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி, அதிவேக நெடுஞ்சாலை வருமானம் தவறாகப் பயன்படுத்தப்பட்டமை மற்றும் மோசடிகள் இடம்பெற்றுள்ள போதிலும், அதற்குப் பொறுப்பான காசாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களைக் கண்டறிந்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கோ அல்லது இவ்வாறான முறைகேடுகளைத் தடுப்பதற்கோ அதிவேக நெடுஞ்சாலை முகாமைத்துவம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மேற்படி காலப்பகுதியில் பிரவேச சாவடிகளில் பணியாற்றிய காசாளர்களால் வாகன வகைகளை மாற்றி, 241,964 நுழைவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளமையும் தணிக்கையில் தெரியவந்துள்ளது. காசாளர்களின் தன்னிச்சையான செயற்பாடுகள் அல்லது கவனக்குறைவினால் ஏற்படும் இத்தகைய வாகன வகை மாற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கு போதிய உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படாத காரணத்தால், 2019ஆம் ஆண்டு முதல் இவ்வாறான தவறுகள் பதிவாகும் போக்கு அதிகரித்துள்ளதாக குறித்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.
இதேவேளை, அதிவேக நெடுஞ்சாலைக் கட்டமைப்பை நிர்மாணிப்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரீதியாக 611,374 மில்லியன் ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைகளின் சராசரி வருடாந்த நிகர இலாபம் 3,560.62 மில்லியன் ரூபாயாகக் கணக்கிடப்பட்டுள்ளதுடன், இதன்படி வட்டி கொடுப்பனவுகளைக் கருத்தில்கொள்ளாது பெறப்பட்ட கடன் தொகையை மாத்திரம் திருப்பிச் செலுத்துவதற்கே 171 ஆண்டுகளுக்கும் மேலாகும் என தணிக்கையில் அவதானிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் ஈட்டப்படும் வருமானத்தைக் கொண்டு பெறப்பட்ட கடன்களையும் அதற்கான வட்டிக் கொடுப்பனவுகளையும் ஈடுசெய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் குறித்த கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.