2022 போன்ற பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படாது – ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதி

2022ஆம் ஆண்டைப் போன்ற பொருளாதார நெருக்கடி நாட்டில் எந்த வகையிலும் மீண்டும் ஏற்படாது என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

2022 போன்ற பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படாது – ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதி
ADVERTISEMENT
ADVERTISEMENT

2022 ஆம் ஆண்டைப் போன்ற ஒரு பொருளாதார நெருக்கடி நாட்டில் மீண்டும் ஏற்படும் என்று சிலர் கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும், அவ்வாறான ஒரு நிலைமை எந்த வகையிலும் ஏற்படாது என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் யுத்தச் சூழ்நிலை காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமை ஒரு வெளிப்புற நெருக்கடியாக இருந்தபோதிலும், அதனையும் முகாமைத்துவம் செய்துகொள்ளக்கூடிய சக்தி தற்போதைய அரசாங்கத்திடம் உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

நிந்தவூர் கலாசார நிலையத்தின் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கும் நிகழ்வில் இன்று (22) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். 1999 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 2014 ஆம் ஆண்டு முதல் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தன.

மிகவும் வளமான கலாசார பாரம்பரியத்தைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் கலாசார விழுமியங்களைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்குக் கையளிக்கும் நோக்கிலும், மாவட்ட மக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு அமைவாகவும், 24 ஆண்டுகளின் பின்னர் இந்த கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பிடப்பட்ட தொகை 945.04 மில்லியன் ரூபாய் ஆகும். 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் 300 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய நிதியும் தேவைக்கேற்ப ஒதுக்கப்படும். திட்டத்தின் ஒட்டுமொத்த கட்டுமானப் பணிகள் 2027 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், இனவாதத்திற்கு இடமளிக்காதிருத்தல், ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்குதல், அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் நாட்டை உருவாக்குதல் மற்றும் அரசியல்வாதிகளின் எல்லையற்ற சலுகைகளைக் குறைத்தல் ஆகியவையே தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காக மக்கள் வழங்கிய ஆணையின் எதிர்பார்ப்புகள் என்றார். அதற்காக அரசாங்கம் தற்போது கணிசமான அளவு பணிகளை ஆற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் நாட்டை உருவாக்கும் பொறுப்பு தமது அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்படாவிட்டால், வேறு எந்த அரசாங்கத்தின் கீழும் அது நிறைவேறாது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இன்று அதிகாரம், செல்வம் மற்றும் அந்தஸ்த்து ஆகியவற்றைப் பார்க்காமல் அனைவருக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் வலியுறுத்தினார்.

மேலும், ஓய்வூதியம் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் எல்லையற்ற சலுகைகளை ஒழித்து, அரசியல்வாதிகளை மக்களுக்காகப் பணியாற்றும் ஒரு குழுவாக மாற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT