க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாளை செவ்வாய்க்கிழமை (27) அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் ஏற்கெனவே திட்டமிடப்பட்டவாறு நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சால் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சை நடவடிக்கைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த செய்முறைப் பரீட்சைகள் முன்னர் அறிவிக்கப்பட்ட பரீட்சை நிலையங்களில் திட்டமிட்டபடி நடைபெறும் என்பதால், பரீட்சார்த்திகள் அதற்கேற்ப செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு
சீரற்ற காலநிலை அல்லது வேறு காரணங்களால் பரீட்சைகளில் கலந்துகொள்வதில் ஏதேனும் சிரமங்கள் ஏற்படுமாயின், தங்களது கல்வி வலயத்துக்குரிய வலயக் கல்விப் பணிப்பாளரைத் தொடர்புகொண்டு தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெற்றுக்கொள்ளுமாறு, பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், பரீட்சைகள் தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் விசாரணைகளுக்காகப் பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பரீட்சைகள் திணைக்களத்தின் தொடர்பு விவரங்கள்:
- அவசர தொலைபேசி இலக்கம்: 1911
- தொலைபேசி: 011 2784208 / 011 2784537
- தொலைநகல்: 011 2784422
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.