இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் நிலநடுக்கம்: இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு
இந்து சமுத்திரத்தின் பண்டா கடல் (Banda Sea) பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (17) அதிகாலை 6.6 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று வெளியிடப்பட்டுள்ள விசேட அறிவிப்பில், இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும், குறித்த நிலநடுக்கத்தால் சுனாமி ஆபத்து எதுவும் ஏற்படாது எனவும் பொதுமக்களுக்குத் திணைக்களம் உறுதியளித்துள்ளது.
அதிகாலை 2.41 மணியளவில் 20 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. பண்டா கடல் பகுதியில் 6.16° தெற்கு அகலக்கோட்டிலும் 131.5° கிழக்கு நெடுங்கோட்டிலும் இந்நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
உரிய தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த நிலநடுக்கத்தின் விளைவாகத் தற்போது இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை எனக் கரையோரப் பகுதிகளிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் வசிக்கும் மக்களுக்குத் திணைக்களம் மீண்டும் உறுதியளித்துள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.