ரசிகர்களுக்கு அதிர்ச்சி: காயம் காரணமாக ஐபிஎல் 2026 தொடக்கப் போட்டிகளில் இருந்து தோனி விலகல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனிக்கு தசைநார் காயம் ஏற்பட்டுள்ளதால், ஐபிஎல் 2026 தொடரின் முதல் இரண்டு வாரப் போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்று சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரசிகர்களுக்கு அதிர்ச்சி: காயம் காரணமாக ஐபிஎல் 2026 தொடக்கப் போட்டிகளில் இருந்து தோனி விலகல்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பேரிடியாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனிக்கு காலில் 'தசைநார் காயம்' (Calf Strain) ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் தற்போது தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும், அதன் காரணமாக நடப்புத் தொடரின் முதல் இரண்டு வாரங்களுக்கு அவர் எந்தப் போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்றும் சிஎஸ்கே நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்துள்ளது. 44 வயதான தோனி, இந்த சீசனில் முழுமையாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தத் திடீர் காயம் அவரது ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தோனி இல்லாத சூழலில், சென்னை அணியின் விக்கெட் கீப்பிங் பொறுப்பை யார் கவனிப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வர்த்தகம் (Trade) மூலம் சிஎஸ்கேவுக்கு வந்துள்ள சஞ்சு சாம்சன், தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பராகச் செயல்படுவார் எனத் தெரிகிறது.

ஏற்கனவே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், இந்த சீசனில் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராகக் களமிறங்குவார் என்பதை உறுதி செய்திருந்தார். இப்போது தோனியின் காயம் காரணமாக, சஞ்சு சாம்சன் பேட்டிங்குடன் சேர்த்து விக்கெட் கீப்பிங் பணிகளையும் கூடுதல் சுமையாக ஏற்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். இது தவிர, அணியில் இளம் வீரர் கார்த்திக் சர்மாவும் மாற்று விக்கெட் கீப்பராகத் தயாராக உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 6 ஆண்டுகள் ஆன நிலையிலும், ஐபிஎல் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வரும் தோனிக்கு, இதுவே கடைசி சீசனாக இருக்கலாம் எனப் பலமுறை பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாகவே முழங்கால் காயத்துடன் போராடி வரும் அவர், நடப்புத் தொடருக்கு முன்னதாகத் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தற்போது ஏற்பட்டுள்ள தசைநார் காயம் குணமாக இரண்டு வாரங்களுக்கும் மேலாகும் என்பதால், அவர் எப்போது மீண்டும் களத்திற்குத் திரும்புவார் என்பதில் தெளிவற்ற நிலை நீடிக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் தங்களின் 'தல' தோனியைப் பார்க்கக் காத்திருந்த ரசிகர்களுக்கு, முதல் சில போட்டிகளில் அவர் விளையாடாதது ஏமாற்றத்தை அளித்தாலும், தொடரின் பிற்பகுதியில் அவர் முழு உடல் தகுதியுடன் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT