14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் மௌலவி கைது
14 வயது சிறுமியை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில், எரகமவில் வசிக்கும் 21 வயது மௌலவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான மௌலவி, அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்ற நிலையில், பின்னர் மே 20 அன்று ஒரு வழக்கறிஞர் மூலம் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அதன்பிறகு, அவர் 2026 ஜூன் 03 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
முக்கிய சந்தேகநபருக்கு உதவிய, எரகமவைச் சேர்ந்த மற்றொரு 21 வயது சந்தேகநபரும், இந்த சம்பவம் தொடர்பாக முதலில் கைது செய்யப்பட்டு, மே 09 அன்று அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
முதலில் மே 20 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவர், பின்னர் ஜூன் 03 வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து எரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, "மௌலவி" என பொலிஸாரால் அறிக்கையிடப்பட்டுள்ள நபர், ஒரு "மௌலவி" அல்ல என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா - இறக்காமம் பிரதேசக் கிளை அறிக்கையிட்டுள்ளது.
“குறித்த சந்தேகநபர் எந்தவொரு அரபுக் கல்லூரியிலும் பட்டம் பெற்ற ஒரு மௌலவி அல்ல, மேலும் அவர் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தாய்ச் சபையிலோ அல்லது இறக்காமம் கிளைச் சபையிலோ அங்கத்தவரும் அல்ல என்பதை எமது சபை உறுதிப்படுத்துவதுடன் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டுவருகின்றோம்” என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

