புகழ்பெற்ற தந்தம் கொண்ட யானை 'கவந்திஸ்ஸ' இறந்து இலங்கையை துயரத்தில் ஆழ்த்தியது
இலங்கையின் மிக முக்கியமான காட்டு யானைகளில் ஒன்றான 'கவந்திஸ்ஸ' இறந்தது. கம்பீரமான தோற்றமும், நீண்ட தந்தங்களும் கொண்ட இந்த யானை, வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் சூழலியலாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் வாய்ந்ததாக இருந்தது.
துப்பாக்கிச் சூட்டுக் காயத்துக்கு உள்ளான நிலையில், சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த 'கவந்திஸ்ஸ' உயிரிழந்த செய்தியை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதிப்படுத்தினார்.
சுமார் 50 முதல் 60 வயதுடையதாகக் கருதப்படும் 'கவந்திஸ்ஸ', சுமார் 11 அடி உயரமும், ஆறு அடிக்கும் அதிகமான நீளம் கொண்ட தந்தங்களையும் கொண்டிருந்தது. இலங்கையில் வாழ்ந்த மிக உயரமான காட்டு யானைகளில் ஒன்றாக இது போற்றப்பட்டது.
2008ஆம் ஆண்டில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த யானைக்கு, 2015ஆம் ஆண்டில், மன்னர் துட்டகைமுனுவின் தந்தையான பண்டைய இலங்கை மன்னர் 'கவான் திஸ்ஸ' (Kawan Tissa) என்பவரின் பெயர் சூட்டப்பட்டது.
குருநாகல் மாவட்டத்தின் கல்கமுவ, உஸ்கல மற்றும் சியம்பலங்கமுவ ஆகிய பகுதிகளில் நீண்டகாலமாக உலா வந்த இந்த யானை, வனவிலங்கு புகைப்படக் கலைஞர்கள் மற்றும் யானை ஆர்வலர்கள் மத்தியில் மிகவும் விருப்பமான ஒன்றாக இருந்தது.
மிகப் பெரிய உருவம் கொண்டிருந்த போதிலும், 'கவந்திஸ்ஸ' யாரையும் தாக்கியதாகவோ அல்லது காயப்படுத்தியதாகவோ எந்தத் தகவலும் இல்லை.
செப்டம்பர் மாதம், அதன் வலது முன் காலுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டதையடுத்து, அதன் உடல்நலப் போராட்டம் தொடங்கியது. வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 24ஆம் முதல் சிகிச்சையைத் தொடங்கினர்; ஆரம்பத்தில் அது குணமடைவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.
இருப்பினும், காலப்போக்கில் அதன் உடல்நிலை மோசமடைந்தது. மேலும் பல உடல்நலச் சிக்கல்கள் ஏற்பட்டதோடு, உணவு உட்கொள்ளும் திறனையும் அது இழந்தது.
இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை (16) , சியம்பலங்கமுவ அருகிலுள்ள நெல் வயல் ஒன்றில் 'கவந்திஸ்ஸ' சரிந்து கிடந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் அவசர சிகிச்சையை மேற்கொண்டனர். மேலும், தாய்லாந்தில் உள்ள கால்நடை நிபுணர்களின் உதவியையும் இலங்கை அரசு நாடியிருந்தது.
இந்த யானையின் இறப்பு, இலங்கையில் எஞ்சியுள்ள புகழ்பெற்ற தந்தம் கொண்ட யானைகளின் பாதுகாப்பு குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
மனித-யானை மோதல், வாழ்விட இழப்பு மற்றும் திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் போன்றவை இலங்கையின் காட்டு யானைகளுக்குத் தொடர்ந்து பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.
சுமார் 20 ஆண்டுகளாக அதன் நடமாட்டத்தைக் கவனித்து வந்த வனவிலங்கு ஆர்வலர்களுக்கு, 'கவந்திஸ்ஸ'வின் இறப்பு என்பது இலங்கையின் இயற்கை பாரம்பரியத்தின் ஈடுசெய்ய முடியாத ஓர் அடையாளத்தை இழந்தது போன்றதாகும்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.