போயா தின சிறப்புப் பரிசு: போலி வங்கி அறிவிப்பு தொடர்பில் எச்சரிக்கை
எதிர்வரும் வப் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாட்டின் முன்னணி வங்கியொன்று விசேட பரிசுகளை வழங்குவதாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் போலிப் பிரச்சாரங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு, இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவான இலங்கை சேர்ட் (SLCERT) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ள வப் போயா தினத்தை முன்னிட்டு, குறித்த வங்கி விசேட பரிசுத் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் போலியான தகவல்கள் பகிரப்பட்டு வருவதாக இலங்கை சேர்ட் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
எனினும், சம்பந்தப்பட்ட வங்கியானது அவ்வாறான எந்தவொரு பரிசு வழங்கும் திட்டத்தையும் அறிவிக்கவோ அல்லது அறிமுகப்படுத்தவோ இல்லை என குறித்த நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்கள், வங்கி விவரங்கள் மற்றும் இரகசியத் தரவுகளை முறைகேடாகப் பெற்றுக்கொள்ளும் திட்டமிட்ட இணைய மோசடியின் ஒரு பகுதியாகவே இவ்வாறான செய்திகள் பகிரப்பட்டு வருவதாக இலங்கை சேர்ட் சுட்டிக்காட்டியுள்ளது.
இத்தகைய ஏமாற்று நடவடிக்கைகளில் சிக்கும் நபர்களின் வங்கிக் கணக்குகள் நிதி இழப்பு உள்ளிட்ட கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, சமூக வலைதளங்கள் ஊடாக வரும் இவ்வாறான போலிச் செய்திகளுடன் இணைக்கப்பட்டுள்ள இணைப்புகளை (links) எந்தக் காரணத்தைக் கொண்டும் அழுத்த வேண்டாம் எனவும், இணையவழியில் பரப்பப்படும் போலியான சலுகைகள் குறித்து தீவிர விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் இலங்கை சேர்ட், பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.