நகை வியாபாரியைத் தாக்கி சித்திரவதை செய்த பொலிஸார் மூவருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வீட்டுக்குத் திரும்பிய தன்னைப் பொலிஸார் கைவிலங்கிட்டு, முழங்காலில் நிற்குமாறு கட்டாயப்படுத்தியதுடன், மனைவி மற்றும் பிள்ளைகள் முன்னிலையில் கடுமையாகத் தாக்கியதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நகை வியாபாரியைத் தாக்கி சித்திரவதை செய்த பொலிஸார் மூவருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
AI generated image
ADVERTISEMENT
ADVERTISEMENT

குளியாப்பிட்டியைச் சேர்ந்த தங்க நகை வியாபாரி ஒருவரைத் தாக்கி, சித்திரவதைக்கு உட்படுத்தியதுடன், சட்டவிரோதமாகத் தடுத்து வைத்து அவரது அடிப்படை உரிமைகளை மீறிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவருக்கு எதிராக உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதன்படி, நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரும் பாதிக்கப்பட்ட வியாபாரிக்குத் தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம், மொத்தமாக மூன்று இலட்சம் ரூபாயைத் தங்களது சொந்தப் பணத்திலிருந்து நட்டஈடாகச் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

உயர்நீதிமன்ற நீதியரசர்களான ஏ.எல். ஷிரான் குணரத்ன, மஹிந்த சமயவர்தன மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

குளியாப்பிட்டியில் தங்க நகைக் கடையொன்றை நடத்திவரும் சாஹுல் ஹமீட் சஷேக் எனப்படும் சாஹுல் ஹமீட் மொஹமட் சுபைக் என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குற்றச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய சந்தேகநபரிடமிருந்து, அதன் பின்னணியை அறியாமல் தங்க நகைகளைத் தான் கொள்வனவு செய்திருந்ததாகவும், அது தொடர்பான விசாரணையின்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் தன்னைத் தாக்கி அச்சுறுத்தியதாகவும் மனுதாரர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தான் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் அங்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், உடனடியாகத் திரும்பி வராவிட்டால் தனது மனைவி மற்றும் பிள்ளைகளைக் கைது செய்வதாக அச்சுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து வீட்டுக்குத் திரும்பிய தன்னைப் பொலிஸார் கைவிலங்கிட்டு, முழங்காலில் நிற்குமாறு கட்டாயப்படுத்தியதுடன், மனைவி மற்றும் பிள்ளைகள் முன்னிலையில் கடுமையாகத் தாக்கியதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து வாகனமொன்றுக்குள் வைத்தும் பல தடவைகள் தாக்கப்பட்டதாகவும், தங்க நகைகள் மற்றும் பணத்தை ஒப்படைக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் வியாபாரி குற்றஞ்சாட்டியிருந்தார்.

தனது நகைக் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்புக் கமராக்களில் தங்க நகைகளை ஒப்படைத்த சம்பவத்தின் ஒரு பகுதி பதிவாகியிருந்ததாகவும் அவர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்திருந்தார்.

மேலும், பொலிஸ் உத்தியோகத்தர்கள் தன்னை வலுக்கட்டாயமாக மதுபானம் அருந்தச் செய்ததுடன், தாக்குதல் சம்பவங்கள் குறித்து வைத்திய அதிகாரிகளிடமோ நீதிமன்றத்திலோ தெரிவிக்கக்கூடாது என அச்சுறுத்தியதாகவும் மனுதாரர் கூறியிருந்தார்.

எனினும், குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், குற்றவியல் விசாரணையின் ஒரு பகுதியாகவே வியாபாரி சட்டபூர்வமாகக் கைது செய்யப்பட்டதாகவும், விசாரணையின்போது தங்க நகைகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும், மனுதாரர் சமர்ப்பித்த மருத்துவ அறிக்கைகள், ஆவண ஆதாரங்கள் மற்றும் ஏனைய சாட்சியங்களை ஆராய்ந்த உயர்நீதிமன்றம், பொலிஸ் உத்தியோகத்தர்களின் விளக்கங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

தீர்ப்பை அறிவித்த நீதியரசர் மேனகா விஜேசுந்தர, பொலிஸ் உத்தியோகத்தர்கள் முன்வைத்த மறுப்புகள் மனுதாரரின் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதற்குப் போதுமான நம்பகத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, பொலிஸ் பரிசோதகர் டி.ஆர்.ஏ. கிஹான் மனோஹர மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்களான எம்.ஏ. அமல் சஞ்சீவ, வி.ஜி. பண்டார ஆகிய மூவரும் மனுதாரரின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இலங்கை அரசியலமைப்பின் 11, 12(1) மற்றும் 13(2) ஆகிய உறுப்புரைகளின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த அரசியலமைப்பு ஏற்பாடுகள் சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தைகளிலிருந்து பாதுகாப்பு, சட்டத்தின் முன் சமத்துவம் மற்றும் கைது செய்யப்பட்ட அல்லது தடுத்து வைக்கப்பட்ட நபர்களுக்கான சட்டரீதியான பாதுகாப்புகள் ஆகியவற்றை உறுதிப்படுத்துகின்றன.

இதனடிப்படையில், குறித்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் தலா 100,000 ரூபாய் வீதம் மொத்தமாக 300,000 ரூபாயை ஆறு மாதங்களுக்குள் பாதிக்கப்பட்ட வியாபாரிக்குச் செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT