காய்ச்சல் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறப்பு
காய்ச்சல் பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தெனியாய கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தென் மாகாண ஆளுநரின் தலைமையில் நேற்று (11) நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தென் மாகாண கல்விச் செயலாளர் நிஷாந்த பத்திரன தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களிடையே காய்ச்சல் பரவியதன் காரணமாக, தெனியாய கல்வி வலயத்தில் உள்ள நான்கு பாடசாலைகள் கடந்த வியாழக்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட்டன.
மேலும், சுமார் 56 மாணவர்கள் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட பாடசாலைகளில் சுகாதாரமான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், நீர் பயன்பாட்டில் அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தென் மாகாண கல்விச் செயலாளர் மேலும் கூறினார்.
