சீரற்ற வானிலை: நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை செவ்வாய்க்கிழமை (27) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பல பகுதிகளில் தொடரும் கனமழை மற்றும் பலத்த காற்றுடனான வானிலையைக் கருத்தில்கொண்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, நாட்டிலுள்ள அனைத்து முன்பள்ளிகள் மற்றும் ஆரம்பக் குழந்தைப் பருவ அபிவிருத்தி நிலையங்களும் நாளை (27) மூடப்பட்டிருக்கும் என தேசிய ஆரம்பக் குழந்தைப் பருவ அபிவிருத்திச் செயலகம் அறிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பின்படி, நாட்டின் பல மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நாட்டின் சில பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
க.பொ.த சாதாரண தர செய்முறைப் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்
இதேவேளை, க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் ஏற்கெனவே திட்டமிடப்பட்டவாறு நடைபெறும் என கல்வி அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
எனவே, குறித்த செய்முறைப் பரீட்சைகளுக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் முன்னர் அறிவிக்கப்பட்ட அட்டவணைக்கு அமைவாகப் பரீட்சைகளில் கலந்துகொள்ள வேண்டும்.
சீரற்ற வானிலை தொடரும் நிலையில், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உத்தியோகபூர்வ வானிலை அறிவிப்புகளை அவதானித்து, தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.