கிளிநொச்சி கூட்டத்தில் பரபரப்பு: அர்ச்சுனா எம்.பிக்கும் அமைச்சர் சந்திரசேகருக்கும் இடையே மோதல்!
கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (16) காலை நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஏற்படுத்திய அமைதியின்மை காரணமாக அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கிளிநொச்சி - திருவையாறு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விவசாயச் செய்கையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குற்றஞ்சாட்டினார். மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளை அவர் மிக மோசமாக விமர்சித்தமையால் கூட்டத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கும் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகருக்கும் இடையே மோதல் வெடித்தது.
நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சரும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வசம் இருந்த கோப்புகளை அமைச்சர் எடுக்க முயன்றபோது மோதல் வெடிப்பதும் அங்கிருந்து வெளியாகியுள்ள வீடியோவில் தெரிகிறது.
"நீ என் மீது கை வைத்தால், உன் மீதும் கை வைப்பேன்... புரிகிறதா?" என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, அமைச்சரை உடனடியாக எச்சரிக்கிறார்.
அதன்பிறகு, கூட்டத்தில் இருந்த பொலிஸாரும் அதிகாரிகளும் தலையிட்டு, நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டத்தை விட்டு வெளியேறினர்.
அதிகாரிகள் பாதியிலேயே வெளியேறியதால், கல்வி, சுகாதாரம் மற்றும் வீதி அபிவிருத்தி உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்ட இக்கூட்டம், எவ்வித முடிவுகளுமின்றி நிறைவுக்கு வந்தது.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் கருணநாதன் இளங்குமரன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.